கடந்த 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையின் போது அருந்ததியினர் மக்களை இழிவாக பேசியது தொடர்பாக அருந்ததியர் மக்கள் மற்றும் சமூக நீதி மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


கடந்த 13ம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதி திருநகர் காலனி பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த போது அருந்ததியினர் மக்களை தூய்மை பணி செய்ய வந்தவர்கள் வந்தேறிகள் என்று இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பேச்சை கண்டித்தும் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அருந்ததியர் சமுதாய மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அருந்ததியர் மக்கள் மற்றும் சமூக நீதி மக்கள் சார்பில் சீமான் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அக்கட்சியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை அடுத்து சாதி சமூகம் மற்றும் மொழியின் அடிப்படையில் வெவ்வேறு வகுப்பு குடிமக்களுக்கு இடையே பகை அல்லது வெறுப்புணர்வை தூண்டுதல் மற்றும் தேர்தல் தொடர்பாக பல்வேறு வகுப்பினரிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளை மீறி தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற தவறியதால் தேர்தல் நடத்தை சட்ட விதிகளின்படி கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் நோட்டீஸ் வேட்பாளர் கையில் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்தில் உரிய விளக்கத்தை கொடுக்கவில்லை என்றால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
