திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டு அறிக்கையில், ”காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் மட்டும் நிலவும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், சுமார் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதோடு மழலைக் குழந்தைகளின் ஆரம்பகால கல்வியும் ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்துவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்ற திமுகவின் 313வது தேர்தல் வாக்குறுதி இனியும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நிர்வாகத் திறனின்றி காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காலதாமதம் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே அரசின் பல்வேறு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதோடு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.