தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, ”புதிய அரசு பதவியேற்ற குறுகிய நாட்களிலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா கடத்தல், ரவுடித்தனம் மற்றும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் என 30-க்கும் மேற்பட்ட முக்கிய குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.”

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விரைவாகவும், கடுமையானதாகவும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:
குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் மீது காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறப்புப் படைகளின் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் மிக கடுமையான தண்டனைகளை விரைந்து பெற்றுத் தர வேண்டும். மாநிலத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஒரு அரசின் முதன்மையான கடமை என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பள்ளிகளில் ‘பீஸ் போர்டு’ கட்டாயம்! அதிரடி உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம்!
