
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை செல்வராஜ். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த அவர், அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் அங்கம் வகித்தார். பின்னர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் திமுகவில் இணைந்த அவர், திமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று கோவை செல்வராஜ் அவர்களது மகனின் திருமண நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தார். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது! கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.