போலி டாக்டர் பட்டம் சர்ச்சை குறித்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை கிண்டி அண்ணா பல்கலையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித்துறையின் தரத்தை உயர்த்துவது, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு தற்போதுள்ள பாடங்களுடன் திறன் வளர்க்கும் பாடப்பிரிவுகளை நடத்துவது, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாநில பாடத்திட்டங்களை வகுப்பது, முதலமைச்சரின் ஆராய்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாணவர்களை தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக தேர்வுகளில் வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விடைத்தாள் திருத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கலைதல் குறித்தும், பல்கலைக்கழகங்களில் பதிவாளர், இயக்குனர் போன்ற முக்கிய பணியிடங்களை தேர்வு செய்யப்படாமல் உள்ளது குறித்தும், புதிய முயற்சி திட்டங்களின் கீழ் சட்டப்பேரவையில் வெளியிடப்பட இருக்கக்கூடிய அறிவிப்புகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
குறிப்பாக, போலி டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து பெரும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உள்ளிட்ட உயர்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களும் பங்கேற்றனர்.