திருப்பூரில் பனியன் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். 
திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெயன், லட்சுமி நகர் பகுதியில் உள்ள இரு மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அயனிங் மற்றும் பனியன் பேக்கிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இரவு வேலை முடிந்ததும் நிறுவனம் பூட்டப்பட்டு தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை அந்த நிறுவனத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி எரியத் தொடங்கியது.
இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
ஆனால் நிறுவனத்தில் இருந்த ஏராளமான பின்னலாடைகள், காட்டன் பெட்டிகள், பாலி பேக்குகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
