2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (TVK) அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த அதிமுக உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் முழுவிரம் பின்வருமாறு. 
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் 25 பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற விவாதம் எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின் (10th Schedule) படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் சில நிபந்தனைகள் உள்ளன.
மூன்றில் இரண்டு பங்கு (2/3) விதிமுறை
முன்பு ஒரு கட்சியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்தாலே அது “பிளவு” எனக் கருதப்பட்டது. ஆனால் 2003-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 91-வது சட்டத்திருத்தத்தின்படி, ஒரு கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து மற்றொரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.
அதிமுகவின் மொத்த பலம், 47 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 2/3 பங்கு என்பது 32 உறுப்பினர்கள் தேவை. ஆனால் தவெகவிற்கு ஆதரவு அளித்தவர்கள் 25 உறுப்பினர்கள் மட்டுமே. 25 பேர் என்பது 47-ல் மூன்றில் இரண்டு பங்கு கிடையாது என்பதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதிமுக தலைமை இந்த 25 பேருக்கும் எதிராக வாக்களிக்க “விப்” உத்தரவு பிறப்பித்திருந்து, அதை மீறி அவர்கள் வாக்களித்திருந்தால், அதிமுக தலைமை சபாநாயகரிடம் இவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளிக்கலாம். இவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்கே (Speaker) உள்ளது. சபாநாயகர் இந்த 25 பேரையும் தகுதி நீக்கம் செய்தால், அவர்கள் தங்கள் பதவியை இழப்பார்கள்.
ஒருவேளை இந்த 25 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டமன்ற பலம் எண்ணிக்கை குறையும். அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-லிருந்து 209 ஆகக் குறையும் (234 – 25 = 209). அப்போது பெரும்பான்மை நிரூபிக்க 105 இடங்கள் இருந்தால் போதுமானது. தவெக-விடம் ஏற்கனவே 108 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் இந்த 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் விஜய் தலைமையிலான அரசு கவிழ்ந்துவிடாது. ஆனால், அந்த 25 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
சுருக்கமாகச் சொன்னால் அந்த 25 உறுப்பினர்களின் சட்டமன்ற பதவிக்கு சட்ட ரீதியாகப் பெரிய ஆபத்து உள்ளது. ஆனால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ‘மேஜிக் நம்பர்’ (பாதிக்கும் மேல்) குறைவதால், தவெக அரசு தப்பிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
“முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்..” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
