துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்புடைய, இரண்டே கால் கிலோ தங்கம் மற்றும் தங்கம் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள், சுற்றுலாப் பயணிகளாக துபாய்க்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்ததாக தெரிவித்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதை அடுத்து அவர்கள் உடமைகளை சோதித்ததில் உடைமைகளில் எதுவும் இல்லை. அதன் பின்பு பயணிகளை, தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்ததில், பயணிகள் தங்கப் பசை பாக்கெட்டுகளை தங்கள் முதுகில் டேப் போட்டு ஒட்ட வைத்துக் கொண்டு, அதற்கு மேல் பனியன்,சர்ட் அணிந்திருந்ததை கண்டுபிடித்தனர். பயணிகளின் முதுகுகளில் ஒட்டப்பட்டிருந்த தங்கப்பசை பாக்கெட்டுகளை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் தங்கப் பசை 1.5 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 73.28 லட்சம்.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் 2 பயணிகளை கைது செய்து தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சோதித்த போது, சென்னையைச் சேர்ந்த மற்றொரு பயணி, அவருடைய உள்ளாடைகளில் 770 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூபாய் 37.56 லட்சம். இதை அடுத்து அந்தப் பயணியும் சுங்க அதிகாரிகள் கைது செய்து,தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூபாய் ஒரு கோடி 10 லட்சம் மதிப்புடைய, இரண்டே கால் கிலோ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய,3 பயணிகள் கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
