தமிழ்நாட்டில் வருகின்ற 22 ஆம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில், மழை என மாறி மாறி வருகிறது. இதனால் மக்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, ஓ எம் ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இதனால் சாலையில் தேங்கி வரும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து 22ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழக-ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் அதனால் 22 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி உரிமை நிதி ரூ.600 கோடியை தமிழக அரசு இன்னும் ஏன் செலுத்தவில்லை?-அன்புமணி கேள்வி