கோவையில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை மாநகர பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே, கோவை சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் சங்கனூர் அடுத்த ஓஸ்மின் நகரில் உள்ள ரயில்வே பாலத்தில் அடியில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. இதில் அந்த வழியாக பிரஸ்காலனி நோக்கி சென்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சிக்கிக் கொண்டது. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் தவிரக்க்ப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் பேருந்தை பத்திரமாக மீட்டனர். மீட்பு பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் பள்ளி பேருந்து சிக்கிக்கொண்ட நிலையில், அதில் இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.