மக்களுக்காக நன்மை செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் போரில் சமரசமே இல்லை என்றும், வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். மேலும், எதை நினைத்து அரசியலுக்கு வந்தமோ அதை பிசிரு இல்லாமல் செய்து முடிக்கும் வரை நெருப்பாக இருப்போம் என்றும் விஜய் குறிப்பிட்டார்.
சினிமாவில் நடிக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் தாம் முதலில் நினைத்ததாகவும், ஆனால் வாழ வைத்த மக்களுக்காக என்ன செய்ய போகிறேன் என்று தினமும் மனதில் ஓடிக்கொண்டே இருந்ததாகவும் த.வெ.க. தலைவர் விஜய் கூறினார். இதற்கு சரியான களம் எது? என்று எண்ணியபேது தோன்றியது தான் அரசியல் என்றும் விஜய் கூறினார்.
மேலும் மக்களுக்காக நன்மை செய்யவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், அரசியல் நமக்கு ஒத்துவருமா என்ற பூதக்கண்ணாடி வைத்து யோசித்தால் சரிவராது என்றும், காமராஜர் வழியில் தவெக செயல்படும் என்றும் விஜய் தெரிவித்தார். அத்துடன் நம்மை பார்த்து வேகமானவர்கள், விவேகமானவர்கள் என்று சொல்ல வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார்.