கடந்த காலங்களில் மொழிக்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்தார்களோ அதே அளவிலான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களுக்கு முன்பாக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.சிலம்பு செல்வர் மா.பொ சிவஞானத்தின் 120வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திரு உருவப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார், சமஸ்கிருதம் மொழிக்கு பாஜக ஆட்சியில் அதிக நிதியும் தென் மாநில மொழிகளுக்கு மிகக் குறைந்த நிதியும் ஒதுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, கடந்த காலங்களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் என்ன நிதி ஒதுக்கீடு செய்தார்களோ, அதே அளவிலான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். முருக பக்தர்கள் மாநாட்டில் நான் அரசியலே பேசவில்லை. ஆன்மிகம் மட்டும் தான் பேசினேன். யாரும் அரசியல் பேசியதாக எனக்கு தெரியவில்லை. மற்றொரு மதத்தை புண்படுத்தும் வகையிலோ இழிவுபடுத்தும் வகையிலோ பேசவில்லை பேசுவதையும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

ரயில் கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு, மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களுக்கு முன்பாக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கோயில் பூசாரிகள் ஆபாச நடனம் ஆடியது குறித்த கேள்விக்கு, அந்த விவரம் முழுமையாக தெரியவில்லை. தெரிந்துகொண்டு பதில் கூறுகிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
முன்னதாக மா.பொ.சி திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது புகைப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர். இதேபோல சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், உள்பட பல்வேறு அமைப்பினரும் மா.பொ. சிவஞானத்தின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ராஜ்யசபா சீட்டால் வெடித்த மோதல்! அணி மாறுகிறதா மதிமுக? உடைத்துப் பேசும் வல்லம் பஷீர்!