மொழியுரிமை காக்க தங்கள் இன்னுயிரைத் தந்தோரைக் கொண்ட இயக்கம் திமுக என்றும் தமிழகத்தில் இருப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல , இனத்தின் அரசு என்று அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் ‘ தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம் ‘ எனும் தலைப்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் – 2026 நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சி பங்கேற்க வந்த முதலமைச்சர் அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி உதவியில் தயாராகியுள்ள டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் விதமாகவும் , அயல் நாடுகளில் தமிழ் அமைப்புகளின் செயல்பாடு தொடர்பாகவும் அமைக்கப்பட்ட அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
அயலகத் தமிழர்களுக்காக ‘தமிழ் மாமணி விருது ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்ட தலைவர் ‘ டாக்டர் அண்ணாமலை மகிழ்நனுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சம் காசோலையுடன் வழங்கப்பட்டது.
கணியன் பூங்குன்றனார் விருதாளர்களான மலேசியா பக்ஷா பல்கலை. நிறுவனர் – முகமது அனீபா பின் அப்துல்லா , சிங்கப்பூர் சரவணன் பத்மநாபன், ஜப்பான் செந்தில்குமார் ராமலிங்கம் , ஆஸ்திரேலியா கோகிலவாணி பிரகாஷ் , ஐக்கிய அரபு அமீரகம் டாக்டர் அன்சாரி , ஜெர்மனி திருமலைச்சாமி வேலவன் , அமெரிக்க தமிழ் மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் கபிலன் தர்மராஜ் , வேர்களைத் தேடி திட்டத்திற்காக தீபா ராணி ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் தலா 18 கி. தங்க பதக்கத்துடன் கணியன் பூங்குன்றனார் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
அயலகத் தமிழர் நலத்துறை ‘தமிழ் மனம்’ திட்டத்தில் அயலகத் தமிழ்க் குழுந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் விதமாக 10 தமிழாசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘ உங்க கனவ சொல்லுங்க..’ திட்டத்தில் அயலகத் தமிழர்களின் கனவுகள் என்ன என்பதை நேரடியாகவும் , காணொலி காட்சி வாயிலாகவும் ஐந்து பேரிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் புத்தாக்கத்தையும் , தொழில் முனைப்பையும் உருவாக்கித் தரும் விதமான பாடத் திட்டங்களையும், பட்டப்படிப்பையும் உருவாக்க நடவடிக்கை எடுகப்படும் , நான் முதல்வன் திட்டம் மூலம் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
உலகத்தில் மக்கள் வாழத் தகுந்த மிகச்சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் தமிழக நகரங்களும் இடம்பெற வேண்டும் என்பதே தனது பெருங்கனவு , இதற்கென சிங்கப்பூர் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் தூய்மைப் பணிகள் நடைபெறும், தமிழ்நாட்டின் நகரங்களை மட்டுமின்றி தமிழ்நாட்டையே தூய்மைப்படுத்துவோம் ,
அவசர ஊர்திகளுக்கான தனி வழித்தட திட்டத்தை சென்னையில் முதல் கட்டமாக தொடங்கி உள்ளோம். விரைவில் அது விரிவுபடுத்தப்படும்
மாணவர்களுக்கான உடற்பயிற்சி , காவல்துறை , நீதிமன்றத்தை அணுகுவதற்கான சட்ட அறிவை புகட்டுவது குறித்து மாநில கல்விக் கொள்கை குழு விவாதத்தித்துள்ளதாகவும் , தமிழகத்தின் வளர்ச்சிக்கான அயலகத் தமிழர்களின் கருத்துகளை தனி செயலியின் மூலமாக கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.
தூய்மைப் பணிக்கென தனியாக அமைச்சரவையை நிறுவ வேண்டும் என்ற பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன. தமிழகத்தில் 30 சதவீத பேருந்துகளை மின்சார பேருந்துகளாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அயலகத் தமிழர்கள் தங்கள் கனவுகள் குறித்து கூறிய கருத்துகளுக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.
பின்னர் மேடையில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் இன்றி உங்கள் உடன் பிறப்பாக கருதி அனைவரையும் வரவேற்கிறேன். அயல் நாடுகளில் நல்ல பொறுப்பில் நீங்கள் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்மை யாராலும் , எதனாலும் பிரிக்க முடியாது.. பல்லாயிரம் ஆண்டு கால சொந்தம் , இன்னும் பல ஆண்டுகள் தொடர போகும் சொந்தம். நாடும் கடலும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது . 70 நாடுகளில் இருந்து நீங்கள் வந்துள்ளீர்.
துறையின் அமைச்சர் நாசர் சத்தம் போடுவார் , சவுண்ட் கொடுப்பார், ஆனால் வேலை நடந்து விடும். அவரிடம் வேலை கொடுத்தால் நாம் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக செய்து கொடுத்து விடுவார்.
புலம் பெயர் தமிழர்கள் தாங்களும் வளர்ந்து அந்த நாட்டையும் வளப்படுத்தியுள்ளீர். உங்களுக்காகவே ஓய்வின்றி அயலகத் தமிழர் துறை உழைத்து வருகிறது .
தமிழகத்தில் 105 முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக 7469 வீடுகளை கட்டி வருகிறோம். அயல் நாடுகளில் வேலைக்கு சென்று இறந்த வாரிய உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தமிழர்கள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும். இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பாதிக்க கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நாடுபோற்றும் நல்ல திட்டங்களால் வரலாறு காணாத வளர்ச்சியை தமிழகம் அடைந்து வருகிறோம். 2030 ம் ஆண்டை மனதில் வைத்து ‘ உங்க கனவ சொல்லுங்க..’ திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம். தமிழர்கள் கனவு கண்டால் நிச்சயம் அதை அடைந்தே தீருவோம்.
உலகில் எங்கிருந்தாலும் உங்கள் உறவுகளை மறக்காதீர். தமிழ் எனும் உலகளாவிய மொழிக்கு சொந்தக் காரர்கள் நாம். சாதி மதம் பாராமல் அனைவரையும் ஒன்றாக்கும் வல்லமை தமிழுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் இந்திய மாநிலங்களில் தனித்தன்மையுடன் இருக்கிறோம்.
மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் திமுக . ஆனால் மொழி , இன வெறியர்களாக நாம் எப்போதும் மாற மாட்டோம். இலக்கியத்தை வைத்து தமிழர்களின் பழம் பெருமை பேசியபோது நம்மை கற்பனை வாதிகள் என்றனர், வரலாறாக அவற்றை ஏற்க முடியாது என்றனர். ஆனால் அவை புனைவுகள் அல்ல, அரசியலுக்காக கூறப்பட்டது அல்ல என்பதை இப்போது நிரூபித்து உள்ளோம்.
கீழடியின் மூலம் 4 ஆயிரம் ஆண்டு பழம்பெருமை உறுதியாகியுள்ளது. பழந் தமிழர்களின் கல்வி அறிவு , நீர் மேலாண்மை , நெல் சாகுபடி , இரும்பு பயன்பாடு உள்ளிட்டவற்றை கண்டறிந்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளோம்.அவற்றை நீங்கள் பார்வையிட வேண்டும்
இது ஒரு கட்சியின் அரசு அல்ல…இனத்தின் அரசு என தலைநிமிர்ந்து நான் சொல்கிறேன். மொழி அடையாளம் இல்லை என்றால் தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம். உங்கள் சகோதரன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன் என்பதை எப்போதும் மறந்து விடாதீர் என்று கூறினார்.
மும்பை யாருக்கு? – அண்ணாமலை vs ராஜ் தாக்கரே: அனல் பறக்கும் ‘ரசமலாய்’ சர்ச்சை!


