மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்வு
மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல், கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது. மீன்பிடி தொழிலில் 5-வது பெரிய மாநிலம் தமிழ்நாடு உள்ளது. மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மீன்வளத்துறை பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக மாற்றினோம். மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது. இனியது உயர்த்தப்பட்டு 8000 ரூபாயாக வழங்கப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என்று பிரதமர் மோடி கூறினார். செய்தாரா? மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள். கலைஞரின் எதிர்ப்பை மீறிதான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க போடப்பட்டது ஒப்பந்தம் மட்டுமே, சட்டம் இல்லை. இலங்கைக்கு வழங்கப்பட்ட பிறகும், பிரதமர் இந்திராவை சந்தித்து கச்சத்தீவை மீட்க வேண்டுமென கலைஞர் வலியுறுத்தினார். கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை” என்றார்.