”இல்லம் தேடி கல்வி திட்டம்” கோரணா காலத்தில் மாணவர்களின் கல்வியில் ஏற்பட்ட இடைவெளியை சரிசெய்வதற்கா உருவான திராவிட மாடல் அரசின் சிறந்த திட்டம் என்றும், பிற மாநிலங்களில் திட்டமிட்டு செயல்படுத்தப்படாத முயற்சியை தமிழ்நாடு முன்னோடியாக செயல்படுத்தியதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமையுடன் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களை விளக்கி பேசினார். தத்தனேரி அருள்தாஸ் புரம் பகுதியில் நடைபெற்ற இந்த பரப்புரையில், குறிப்பாக “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் பயன்களை விரிவாக எடுத்துரைத்தார்.

பேச்சின் போது அவர், கொரோனா காலத்தில் பள்ளிகள் நீண்ட காலம் செயல்படாததால் மாணவர்களின் கல்வியில் ஏற்பட்ட இடைவெளியை சரிசெய்ய இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறினார். பிற மாநிலங்களில் திட்டமிட்டு செயல்படுத்தப்படாத முயற்சியை தமிழ்நாடு முன்னோடியாக செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
“இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் மூலம், பள்ளி நேரத்திற்கு பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு கூடுதல் கற்றல் வழங்கும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டதாக அவர் விளக்கினார். இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறினார்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே அதிக அளவில் இந்த திட்டத்தில் கலந்து கொண்டதாகவும், இது சமூகநீதி மற்றும் சம வாய்ப்பு என்ற இலக்கை வலுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் ரூ.200 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மிகச் சிறந்த விளைவுகளை அளித்துள்ளதாகவும், அதன் தாக்கம் தன்னைக் கூட ஆச்சரியப்படுத்தியதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தில் பணியாற்றும் குழு உறுப்பினர்கள் எந்தவித ஊதியமோ நன்கொடையோ பெறாமல் தன்னார்வத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அரசு பணம் வீணாகும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் அவர் கூறினார். இத்திட்டம் போன்ற பல நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ள தற்போதைய அரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினாா்.
நிதி பகிர்வில் தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் – உதயநிதி வேண்டுகோள்…
