டெல்லியில் 66 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜாவின் மகள் நிலா ராஜா பங்கேற்று தங்கம் வென்றார். இவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர் .பாலுவின் பேத்தியும் ஆவார். சென்னை திரும்பிய நிலா ராஜாவை டி.ஆர்.பி ராஜா மற்றும் பலர் மாலை அணிந்து உற்சாகமாக வரவேற்றனர்.
இது குறித்து நிலா ராஜா செய்தியாளர்களிடம் பேசிய போது, “நான் தங்கம் வென்ற பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாத்தா மற்றும் உதய் மாமா ஆகியோர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் ஒன்றை தமிழ்நாட்டில் கட்டி தருவதாக உதய் மாமா கூறியிருக்கிறார். அது விரைவில் தமிழ்நாட்டிற்கு வரும். அதன் பிறகு சர்வதேச போட்டிகளும் இங்கு நடக்கும் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உதய் மாமா நிறைய செய்திருக்கிறார். துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் இங்கு வருவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசியுள்ளார்.

நிலா ராஜா ஏற்கனவே 65 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா, ” தமிழ்நாட்டிற்காக முதலில் என் மகள் பதக்கம் வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதேபோன்று இரண்டாவது முறையும் பதக்கம் வென்றது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்று பேசியுள்ளார்.