கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள சமூக வலைதள பதிவில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் உயிரிழந்த தனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக விஜய் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் விஜய் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.