சென்னை கொரட்டூரில் கஞ்சா விற்பனையாளர் மற்றும் சப்ளையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

சென்னை கொரட்டூர் கருக்கு மேம்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கஞ்சா வியாபாரி என்பதும் அவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக கஞ்சா பாக்கெட் இருப்பதும் தெரியவந்தது.
அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (24) என்பதும், இவருக்கு அண்ணாநகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கஞ்சா சப்ளை செய்ததும் தெரிய வந்தது. ஜெயசூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணாநகர் 3வது அவென்யூவை சேர்ந்த கிசோக் லால் (25) என்ற வாலிபரை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 13 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.