நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி நிறைவடையும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்ற நிகழ்வுடன் கோலாகலமாக தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்ச்சியை ஒட்டி ஊர் மக்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொடிப்பட்டத்தினை பேராலயத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அருட்பணியாளர் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். முதல்நாள் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது.
கோட்டார் பேராலய திருவிழாவை ஒட்டி தினமும் ஆடம்பர கூட்டு திருப்பலி, பிறப்பு ஆராதனை நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. 10-ஆம் நாள் மலையாள திருப்பலி, தேர்ப்பவனி ஆகியன நடைபெறுகிறது. திருவிழா நிறைவு நாளான டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொடியேற்று நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் குமரி மாவட்டத்தை சார்ந்த மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.