மதுரையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் அதிகாலை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனையின்போது ஆதரவாளர் ஒருவர் கூச்சலிட்ட நிலையில், அவரைப் பார்த்து மூர்த்தி முறைத்துக் கொண்டு விரலை நீட்டி எச்சரித்த சம்பவமும் கவனம் பெற்றுள்ளது.
மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, மதுரை ஐயர் பங்களா ரோஜா வீதி பகுதியில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் இன்று (நவம்பர் 20) அதிகாலை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கல்குவாரி ஒப்பந்தம் மற்றும் டெண்டர் தொடர்பான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சோதனை நடைபெறும் இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், மூர்த்தியின் ஆதரவாளர் ஒருவர், “போலீஸ் அராஜகம் ஒழிக” எனக் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அந்த ஆதரவாளரைப் பார்த்து மூர்த்தி, “டேய் யார்ரா அவன்… சும்மா இருடா…” எனக் கூறி, முறைத்துப் பார்த்து விரலை நீட்டி எச்சரித்ததாகக் கூறப்படும் காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.
இதற்கிடையே, அதே தெருவில் உள்ள மூர்த்தியின் மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்துவதற்காக போலீசார் அவரை அழைத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குவாரி விதிமீறல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் வீடுகளில் போலீசார் மேற்கொண்டு வரும் சோதனை மதுரையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.
