மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்
சிவகாசி-மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி மேற்குப் பகுதி சாட்சியார்புரத்தில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ அறிவுசார் குறையுடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 105 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை யடுத்து விருதுநகர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு பள்ளிக்கு நேரடியாக வந்து பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள், கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள், இடைநிலை ஆசிரியர் இமானுவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பள்ளியில் உள்ள அனைத்து தரப்பினரின் விசாரணைக்கு பின் மனநலம் குன்றிய மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வைரலாக பரப்பியது பள்ளியில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து பள்ளியில் பயிலும் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அதனை வீடியோ காட்சியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய ஆசிரியர் இமானுவேல் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி சிவகாசி போலீஸ் டி.எஸ்.பி தனஞ்செயனிடம் பள்ளித்தாளாளர் தயாளன்பர்ணபாஸ் புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் இமானுவேலின் செல்போனை பறிமுதல் செய்து அவரிடமும் மாணவர்களிடம் தொடர்ந்து பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியதில் கடந்த 2017முதல் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் இமானுவேல் தமக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதிற்குள் காழ்ப்புணர்ச்சியாக வைத்துக் கொண்டு பள்ளியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அவரே அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் இமானுவேலை கைது செய்து அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.