Homeசெய்திகள்தமிழ்நாடுபால் நிறுத்தப் போராட்டம் - உற்பத்தியாளர்கள் அறிவிப்பு..

பால் நிறுத்தப் போராட்டம் – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு..

-

திட்டமிட்டப்படி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

aavin

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், “அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் முதல்வரை கலந்தாலொசித்து தான் தான் இது குறித்து அறிவிக்க முடியும் என்றும், முன்னதாக எந்தவித உத்திரவாதத்தையும் அளிக்க முடியாத என்றும் அமைச்சர் கூறினார். ஒரு கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆவின் நிறுவனங்களுக்கு தொடர்ந்து பால் வழங்குவதை நிறுத்தி விடுவோம் என்றும் தெரிவித்திருந்தோம் . அதன்படி நாளை காலை முதல் தமிழகம் எங்கும் உள்ள கிராம சங்கங்களின் மூலமாக ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் படி முற்றிலுமாக நிறுத்தப்படும். இதனால் நாள்தோறும் காலையில் 50 ஆயிரம் லிட்டர் , மாலையில் 50 ஆயிரம் லிட்டர் வீதம் பால் கொள்முதல் படி குறையும்.

கடந்த ஆண்டு இதே நாளில் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்திருந்தோம். ஆனால் இப்போது 27 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவினுக்கு வருகிறது. இதனால் தான் சென்னை உள்ளிட்ட நகர்புற மக்களுக்கு ஆவின் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆவின் கொள்முதல் 30 லட்சம் லிட்டர் என்றாலும், தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் பத்தில் ஒரு பங்கு பாலை ஆவின் தான் கொள்முதல் செய்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இந்த ஆவின் நிறுவனத்தை அரசு முழுமையாக காப்பாற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் எங்களது சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் தனியார் நிறுவனத்திற்கு பாலை மடைமாற்றி விடுவார்கள்.

அமைச்சர் நாசர்

எங்களது பாலை தனியார் இன்றைய தினம் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. ஆவின் நிறுவனம் பசும் பாலை 35 ரூபாய்க்கும், எருமைப்பாலை 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கிறது. இந்த விலை உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகவில்லை. தனியாருக்கு நிகராக அரசு விலை வழங்கிட வேண்டும். அதன்படி, பசும்பாலுக்கு கொள்முதல் விலையாக 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 51 ரூபாயும் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். நாளைய தினம் காலை முதல் தமிழக ஆவின் கிராம சங்கங்களில் பால் கொள்முதல் நிச்சயமாக நிறுத்தப்படும்.. சற்று ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதும் உள்ள 25% உற்பத்தியாளர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் அல்லது நாளை காலைக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் இந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.” என்றும் தெரிவித்தனர்.

MUST READ