டாஸ்மாக்கிற்கு முதல்முறை மது அருந்த வருவோருக்கு கவுன்சிலிங்- அமைச்சர் முத்துசாமி
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218-வது நினைவு நாளையொட்டி, ஈரோட்டில் பொல்லான் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, சுதந்திர போராட்ட வீரர் பொல்லானிற்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, “சில இடங்களில் மதுபானத்திற்கு கூடுதல் விலை வைத்து விற்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 7 மணிக்கு மது விற்பனை செய்வதாக சொல்லவில்லை. விற்பனை நேரம் மாற்றப்படாது. அது தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். தவறான இடத்தில் மது வாங்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சொன்னோம்.

மதுவிற்பனையாளர்கள் மேற்பார்வையாளர்கள்களுக்கு சுற்றறிக்கை கொடுத்துள்ளோம். புதியதாக இளைஞர்கள் மது வாங்க வந்தால் அது குறித்து தகவலை அளிக்க வேண்டும். அந்த இளைஞர்களுக்கு கவுன்சிலிங் தர உள்ளோம். 21 வயதுக்கு குறைவாக வரும் இளைஞர்களுக்கு மது விற்க கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு வரும் சிறார்களை அழைத்து அன்பால் பேசி அறிவுறுத்த சொல்லி இருக்கிறோம். முதல் தடவையாக 3 மாவட்டத்தில் வாகனம் மூலம் மதுவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

சிறிய டெட்ரா பேக் வந்தால் குழந்தைகள் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற ஆபத்து உள்ளதால் டெட்ரா பேக் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பிறகே முடிவு செய்யப்படும். 15 இடங்களில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் (De addition centre) அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். பொன்முடி என்ன தப்பு செய்தார்? என்ன குற்றச்சாட்டு? இது பா.ஜ.க வின் பழிவாங்கும் நடவடிக்கை” என்றார்.


