HomeBreaking Newsடிசி-யை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கிடுக்கிப்பிடி!

டிசி-யை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கிடுக்கிப்பிடி!

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை உடனடியாகப் பள்ளியின் விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்றும், நிலுவைக் கட்டணத்தைக் காரணம் காட்டி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை (TC) வழங்க மறுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்மோகன்

நீதிமன்ற உத்தரவு:
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களைப் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
​இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, “தனியார் பள்ளிகள் தகவல் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வராவிட்டாலும், கட்டண நிர்ணய ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டும். எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

we-r-hiring

அமைச்சரின் அதிரடி எச்சரிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:
​”நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளிகள் தங்கள் கட்டண விவரங்களை உடனடியாக விளம்பரப் பலகையில் வெளியிட வேண்டும். தவறும் பள்ளிகள் மீது அரசு சார்பில் கடும் நடவடிக்கை பாயும். எக்காரணத்தைக் கொண்டும், நிலுவைக் கட்டணத்தைக் காரணம் காட்டி மாணவர்களின் உயர்கல்வியைத் தடுக்கும் வகையில் மாற்றுச் சான்றிதழ்களை (TC) வழங்க மறுக்கக் கூடாது.”

பள்ளிகளில் அரசியலுக்குத் தடை:
மேலும், பள்ளிகளில் அரசியல் கலப்பதைத் தவிர்க்கும் வகையில் அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். “எந்தக் கட்சியினராக இருந்தாலும், பள்ளி வளாகங்களுக்குள் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. விதியை மீறிச் செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து உயர் நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கத்திற்கு அரசு சட்டப்பூர்வமாகப் பதிலளிக்கும்” என்றார்.

தேவையற்ற விடுமுறைக்குக் கண்டனம்:
“மின்வெட்டைக் காரணம் காட்டி காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஒன்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். எந்தச் சூழலிலும் தேவையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதைத் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும்” என்றும் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

MUST READ