தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2ம் தேதி நடைபெறும் நிலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். கோயில் மாடவீதியில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வரிசைகள் அதிகப்படுத்தப்படும், வாகன பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வைகுண்ட ஏகாதசியன்று கூட்டம் அதிகம் கூடும் கோயில்களி, இது போன்ற ஆய்வுகள் மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கடந்த காலங்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 200 ரூபாயாக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் கருத்துகளை கேட்டபின் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பொருளாதார நிலை கவனத்தில் கொண்டு படிப்படியாக சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். சிஎம்டிஏவில் திட்ட அனுமதி விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியை போல தவறுகள் நடைபெறாமல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எந்த தவறுகளும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயம்பேடு மார்கெட்டில் பண்டிகைக் காலங்களில் அமைக்கப்படும் சிறப்பு சந்தைகளில் அதிக தொகை வசூலிக்கும் இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
