மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கடந்த ஜூன் 20-ஆம் நாள் கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து த்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்தும் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மேகதாது அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு நீர் கூட தமிநாட்டுக்கு கிடைக்காது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகாவின் நடவடிக்கைக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். ஆலோசனைக்கு பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட அமைச்சர் துரைமுருகன் திட்டமிட்டுள்ளார். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


