திமுக அரசின் நடவடிக்கையால் மண்ணும், மக்களும் செழித்துள்ளனர்: ஸ்டாலின்
திமுக அரசின் வேளாண் திட்டங்களால் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழாவில் பேசிய அவர், “ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோலாக இருப்பது வேளாண்துறை தான். வேளாண் வணிக திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வேளாண் துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திமுக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் உயிரோடும் தொடர்புடையது. திமுக அரசின் வேளாண் திட்டங்களால் மண்ணும் செழித்துள்ளது. மக்களும் செழித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. விவசாயிகளுக்கு கடன் மானியம் வழங்குவதில் அக்கறையோடு செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது, இதற்கு மகுடம் சூட்டுவது போல் வேளாண் திருவிழா நடைபெறுகிறது. விவசாயிகள் விற்பனையாளராக மாற வேண்டும் என்பதற்காக உழவர் சந்தைகளை கலைஞர் ஏற்படுத்திக் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.


