Homeசெய்திகள்தமிழ்நாடுவாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்? பிரதமருக்கு முதல்வர் கேள்வி

வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்? பிரதமருக்கு முதல்வர் கேள்வி

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.

we-r-hiring

கள ஆய்வில் முதலமைச்சர்‘ என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின் அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் புறநகர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தேன். அதேபோல மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் மையத்தையும் சென்று பார்த்தேன். உணவு தரமாக தயார் ஆகிறதா, உரிய நேரத்துக்கு கொண்டுபோய்க் கொடுக்கப்படுகிறதா என்று பார்த்தேன்.சாப்பிடுகிற உணவு சுவையாவும், சூடாவும் இருப்பதாகப் பள்ளிக் குழந்தைகள் சொன்னார்கள். இதைக் கேட்டபோது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதிகாரிகள், அலுவலர்களோடு இரண்டு நாட்கள் அமர்ந்து – வேலூர்,
இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிற அனைத்துப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தேன்.
அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில இடங்களில் சுணக்கம் இருந்தாலும் – அதுவும் அன்று முதல் சரி செய்யப்பட்டு விட்டது. யார் மேலேயும் நம்பிக்கை இல்லாமலோ இந்த ஆய்வுத் திட்டத்தை நான் தொடங்கவில்லை. எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்கிற மனநிறைவை நான் அடைவதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். வருகிற 15,16 தேதிகளில் சேலத்துக்குச் செல்கிறேன். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன். இன்னும் திட்டங்கள் எவ்வாறு சிறப்பாகக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு என்றார்.

இதேபோல் புதுமைப் பெண் – கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்தத் திட்டத்தின் பயனை மாணவிகள் உணரத் தொடங்கி இருப்பதாகக் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக கருதுகிறேன்! 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள், உயர்கல்விக்கு வந்தால், அவங்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற மகத்தான திட்டம் இது. முதலில், 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் இந்தத் தொகையைப் பெற்றார்கள். பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடந்த இரண்டாம் கட்டத் தொடக்க விழா மூலமாக மேலும் 1 லட்சம் மாணவிகள் பயன்பெறப் போகிறார்கள். உதவித்தொகை பெற வந்த மாணவிகளின் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தேன்.

12-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்த முடிவு செய்துவிட்டாராம் திருத்தணியைச் சேர்ந்த மகாலட்சுமி. குடும்பச் சூழல் காரணமாக பணம் செலவு செய்ய முடியாத நிலை இருந்திருக்கிறது. அரசாங்கமே ஆயிரம் ரூபாய் தருவதை தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அடம்பிடித்து, இப்போது கல்லூரியில் சேர்ந்திருப்பதாக மகாலட்சுமி பேட்டி கொடுத்திருக்கிறார். வெள்ளாத்தூரைச் சேர்ந்த சுல்தானா பர்வீன் என்கிற மாணவி, ஓராண்டாகக் கல்லூரிக்கு போகவில்லை. இந்தத் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்பிறகுதான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அவருக்கும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.
இவ்வாறு எத்தனையோ மாணவிகளின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது இந்த திட்டம். தலைமுறை தலைமுறைக்கும் இது பயனளிக்குற திட்டமாக அமையப் போகிறது என பதில் அளித்தார்.

தி.மு.க ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என்று கேட்கிறாரே பிரதமர்? என எழுப்பிய வினாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்த அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருக்கிறவர் இதைக் கேட்கலாமா?என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கிறது. ஆனால் அதற்கான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநரின் பிடிவாதமும் தொடர்கிறதே? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களில் வருகிறது.தன்னுடைய மகன் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக வேலை பார்த்த கம்பெனியில் பணத்தைக் கையாடல் செய்திருக்கிறான் என்று தெரிந்து அவனது அம்மா தற்கொலையே செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில்தான் இது நடந்திருக்கிறது. மகன் தலைமறைவாகிட்டான். இது ஒரு சம்பவம்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்திருக்கிறார். காவிரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது இரண்டாவது சம்பவம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது மூன்றாவது சம்பவம். மதுரையில் குணசீலன் என்கிற கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.இவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை. இவை எல்லாம் தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்?

இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர். அமைச்சரவை அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதே சட்டத்தைச் சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் 3 மாதமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது.இதில் என்ன கொடுமை என்றால் ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக் கூடிய தொகைக்கு வரி போடுவதுதான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இது இருக்கிறது.ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யாமல் அதை அங்கீகரிக்கிற வகையில் வரி போடுகிற இவர்களை என்ன சொல்வது? என கேள்வி எழுப்பினார்.

MUST READ