தமிழ்நாடு அரசு சார்பில் ‘வைக்கம் விருது’- முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் வைக்கம் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஓராண்டு நடத்தப்படும். பழ. அதியமானின் வைக்கம் போராட்ட நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படும். தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ல் பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டோருக்காக போராடும் ஆளுமைகள், நிறுவனங்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்படும். நவம்பர் 29 அன்று தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள், ஆளுமைகள் பங்கேற்கும் விழா நடத்தப்படும். வைக்கம் போராட்டம் தொடர்பாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படும்

கேரளா வைக்கத்தில் உள்ள பெரியார் சிலையை ரூ.8.14 கோடி செலவில் நவீன முறையில் புனரமைக்கப்படும். எல்லை கடந்து சென்று வைக்கத்தில் பெரியார் போராடியதை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடதக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள், நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வைக்கம் விருது சமூக நீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். ஈ.வெ.ராமசாமி என்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன் என அறிவித்துக் கொண்டு 95 வயது வரை இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களின் சமூக நீதியை நிலைநிறுத்தவும் அவர் நடத்திய சுயமரியாதைப் போராட்டங்கள் பற்பல, அவற்றி மிக முக்கியமானது வைக்கம் போராட்டம் ஆகும்” என்றார்.


