spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு- மு.க.ஸ்டாலின்

ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு- மு.க.ஸ்டாலின்

கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
Photo: TN Govt

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போது இரவு 1.30 மணி. இந்திய நேரத்தைவிட ஜப்பான் நேரம் மூன்றரை மணி நேரம் முன்கூட்டியே இருக்கும். அதாவது, உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இப்போது இரவு 10 மணி. கழகத்தின் சார்பிலான பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க விழாவை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் கொண்டாடி மகிழ்வதற்கான ஆயத்த வேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான இயக்கப் பணிகளை முடித்துவிட்டு, குடும்பத்தினர் முகம் கண்டு சற்று மகிழலாம் என்ற நினைப்புடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பீர்கள்.

உடன்பிறப்புகளாம் உங்கள் முகத்தை நான் நேரில் பார்த்து 9 நாட்களாகிறது. கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பையும் சுமக்கும்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு உழைத்தீர்கள். அன்பிற்கினிய தமிழ்நாட்டு மக்களும், நெஞ்சிற்கினிய உடன்பிறப்புகளாகிய நீங்களும் அளித்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டை முன்னேற்றிட எல்லா வகையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

we-r-hiring
ஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!
Photo: TN Govt

பத்தாண்டுகால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் விரட்டி, ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. அதனால்தான் கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருகிறேன். தொழில்வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்புகள் உயர வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார முன்னேற்றம் காண முடியும். அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை திராவிட மாடல் அரசிற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்திருந்தனர்.

தொழில்துறை அமைச்சராகத் தன் பணியை சிறப்பாக நிறைவேற்றி, நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ஏற்கனவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டபோது, “அடுத்த முறை உங்கள் மாநில முதலமைச்சரை அழைத்து வாருங்கள்” என அங்குள்ளவர்கள் சொன்னதைத் தெரிவித்து, இந்தப் பயணம் குறித்து வலியுறுத்தியிருந்தார். தொழில்துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களும் இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார். சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சரும் நண்பருமான திரு.ஈஸ்வரன் ஏற்கனவே எனக்கு அழைப்பு விடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. ஜப்பான் நாட்டுடன் தமிழ்நாட்டுக்கு நல்லுறவு இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நிலையில்தான் கடல் கடந்து, சிங்கப்பூர் – ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணச் சிறகுகளை விரித்தேன். 9 நாட்கள் வெளிநாட்டுப் பயணமா, இவ்வளவு நாட்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததில்லையே என நான் தயங்கினாலும், இந்தப் பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பதால் பயணச் சிறகுகள் விரிந்தன.

சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
Photo: CM Mkstalin

சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்த நிலையில், தாய்மடியாம் தமிழ்நாட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகும் சூழலில், உடன்பிறப்புகளிடம் இந்தப் பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் விளக்கமாகச் சொல்லிட வேண்டும் என்கிற என் மனதின் விருப்பமே இந்தக் கடிதம். ஒரு டைரி போல இதனை எழுதுகிறேன்.

அடுத்தவர் டைரியைப் படிக்கலாமா என்ற தயக்கம் தேவையில்லை. நாம் யாரும் அடுத்தவர்களல்ல. கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தில் எல்லாரும் கலைஞரின் உடன்பிறப்புகள். அதனால் பயணத்தின் நாட்குறிப்பை உங்களிடம் பதிவிடுகிறேன்.

மே 23-செவ்வாய்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்தித்தேன். இந்தப் பயணத்தின் மூலமாக எவ்வளவு முதலீடு கிடைக்கும் என்ற கேள்வி அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. “எவ்வளவு முதலீடு என்பதைவிட, 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிங்கப்பூர் – ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அழைப்பதுதான் பயணத்தின் முதன்மையான நோக்கம்” என்பதைத் தெரிவித்தேன். கடந்த ஆண்டு துபாய்க்குப் பயணம் செய்தபோது, ஒப்பந்தமான முதலீடுகள் எந்தளவு வந்திருக்கிறது என்ற கேள்வியையும் செய்தியாளர்கள் கேட்டபோது, எந்தெந்த நிறுவனங்களிலிருந்து எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்ற விவரத்தையும் ஆதாரத்துடன் அவர்களிடம் தெரிவித்தேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பினார்கள் செய்தியாளர்கள். விமான நிலையம் வரை வந்திருந்த மாண்புமிகு அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரிடமும் அன்புடன் விடைபெற்றேன். இயந்திரப் பறவை எனப்படும் விமானம் தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியது.

"இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம். நம்மைவிட முன்கூட்டியே அவர்களுக்கு நேரம் ஓடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூரில் தரையிறங்கினேன். சிங்கப்பூர் நேரம், இரவு 7 மணி. சிங்கப்பூர் பயணத்தில் என்னுடன் தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், தொழில் – முதலீட்டு ஊக்குவிப்பு – வணிகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் உடனிருந்தனர். எனக்கான உணவு, என் உடல்நலன் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளும் பொருட்டு என் துணைவியாரும் உடன்வந்தார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியத் தூதர் திரு.குமரன் அவர்கள் வரவேற்றார். திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களின் சகோதரர். நல்வரவேற்புடன், நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்குப் புறப்பட்டோம். இரவு நேரமானபோதும், சிங்கப்பூர் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் ஹோட்டல் வரவேற்பரங்கில் காத்திருந்து, அன்பைப் பொழிந்து வரவேற்பளித்தனர். டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த சுதர்சன் சீனிவாசன் அவர்களும் வரவேற்றார். ஹோட்டல் அறைக்குச் சென்றபிறகும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சிங்கப்பூர் பயணத் திட்டம் குறித்த ஆலோசனைகள் நீடித்தன. சிங்கப்பூரில் நம் வீட்டு சமையல் போன்ற உணவை அருமை நண்பர் சிங்கப்பூர் ராம் தனது இல்லத்திலிருந்து கொண்டு வந்து பரிமாறினார். அதில் அன்பும் சுவையும் மிகுந்திருந்தது.

Stalin urges Japanese firms to diversify investments in TN | Latest News  India - Hindustan Times

மே 24-புதன்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் தனித்தனியான சந்திப்புடன் அன்றைய நாள் தொடங்கியது. டெமாசெக் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. தில்லான் பிள்ளை சந்திரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.கிம்யின் வாங், கேபிட்டாலேண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான திரு.சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

மாலையில் சிங்கப்பூரின் தொழில் – வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான தமிழர் திரு.ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். அவர் என் இனிய நண்பர். சென்னையின் மேயராகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் நான் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டபோது அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரும் சென்னை வரும்போது என்னைச் சந்திப்பது வழக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, சென்னையில் என்னைச் சந்தித்த திரு.ஈஸ்வரன் அவர்கள் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், சிங்கப்பூருக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

Analysing Chief Minister MK Stalin's Visit To Singapore And Japan To Drum  Up Investments In Tamil Nadu

சிங்கப்பூர் அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் போல தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரைச் சந்தித்து உரையாடியபோது, முன்பு சிங்கப்பூர் வந்த போது இருந்ததைவிட இப்போது அதிக பசுமையாக இருக்கிறதே, நகரக் கட்டமைப்பை எப்படி சிறப்பாகக் கையாள்கிறீர்கள், சாலையோர நடைபாதைகளை மக்கள் எப்படி இவ்வளவு சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பவை குறித்தெல்லாம் பேசிவிட்டு, சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தோம்.

திரு.ஈஸ்வரன் அவர்களுடன் புறப்பட்டு, சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கில் பங்கேற்றேன். சிங்கப்பூரில் உள்ள தொழில் கூட்டமைப்பினர் அன்புடன் வரவேற்றனர். கருத்தரங்கில், தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோர் பேசியபிறகு, முதலீட்டாளர்களுடன் நான் உரையாடினேன். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள நீண்டகால உறவை எடுத்துக்கூறி, வந்தாரை வாழவைக்கும் சிங்கப்பூர், இனி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் கை கொடுக்கும் என்று நான் நம்புவதாகச் சொன்னபோது அனைவரும் கை தட்டல்களால் வரவேற்றனர். முதலீட்டாளர் மாநாட்டுக்கான அழைப்பினை விடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

தொழில் முதலீடுகள் சார்ந்த தொடர்ச்சியான சந்திப்புகளையடுத்து, மனது சற்று இளைப்பாறும் வகையில் சிங்கப்பூர்வாழ் தமிழ் நெஞ்சங்கள் கலாச்சார-பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரான தமிழர் சண்முகம் அவர்களை அந்த விழாவில் சந்தித்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழை அவரிடம் சிங்கப்பூர் தமிழர்கள் நேரில் கொடுத்தபோது, தமிழ்நாட்டு முதலமைச்சரை வரவேற்க நானும் விழாவுக்கு வருகிறேன் என மனப்பூர்வமான அன்புடன் அவர் வருகை தந்திருந்தார். சிங்கப்பூர் பிரதமருக்கு அடுத்த நிலையில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கக்கூடிய தமிழரான திரு.சண்முகம், அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்.

Chief Minister M.K.Stalin in Japan.. Latest update on the agreement,  invitation!, cm stalin invite japan to attend world investors conference in  chennai

சிந்தனை வளமும் செயல்பாட்டுத் திறமும் கொண்ட சிங்கப்பூர் நாட்டின் திரு.சண்முகம் அவர்கள், தமிழ்நாட்டில் நடைபெறும் நமது திராவிட மாடல் ஆட்சியை எந்தளவு கவனிக்கிறார் என்பதை அவரது பேச்சில் உணர முடிந்தது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்தார். பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், காலைச் சிற்றுண்டித் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் பாராட்டினார்.

கலாச்சார-பண்பாட்டு விழாவில், சிங்கப்பூரில் வாழும் தமிழின் இளந்தலைமுறையினர் அரங்கேற்றிய மயிலாட்டம்-ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக இருந்தன. கடல் கடந்த நாட்டில் இருந்தாலும், சிங்கப்பூர் தமிழர்களிடம் தமிழ் மண்ணின் மணம் வீசுவதையும், தமிழர் என்ற உணர்வு ஆழமாக வேரோடி இருப்பதையும் உணர்ந்தேன். மகிழ்ந்தேன். இந்தப் பண்பாட்டுத் தொடர்பு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., அவர்கள் தனது பேச்சில் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டினார். சிங்கைவாழ் தமிழர்களின் உணர்வையும் உழைப்பையும், சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் என்னுடைய பேச்சில் எடுத்துரைத்தேன்.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் உலகளவில் இன்று உயர்ந்து நிற்கக் காரணமான அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்கள். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பை மதித்துப் போற்றியதுடன், சிங்கப்பூரின் அரசு நிர்வாக மொழிகளில் ஒன்றாகத் தமிழையும் இடம்பெறச் செய்த மாண்பாளரான லீ குவான் யூ அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் பெருமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும், மன்னார்குடியில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அங்கே அவரது சிலை நிறுவப்படும் என்றும், பண்பாட்டு விழாவில் அறிவித்த போது, வரவேற்பும் ஆரவாரமும் நெடுநேரம் நீடித்தன. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தாய் மண்ணில் பெருமை சேர்க்கப்படுகிறது என்ற உணர்வே சிங்கை தமிழர்களிடமிருந்து வெளிப்பட்டது.

A Bullet Train Journey For MK Stalin In Japan, And Then A Tweet For India

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் பலர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதனால்தான், மன்னார்குடியில் நினைவுச் சின்னம் என அறிவித்தேன். விழாவில் கலந்துகொண்ட நம் தொழில்துறை அமைச்சரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு அது கூடுதல் மகிழ்வைத் தந்திருக்கும். டெல்டாகாரன் என்பதை என்றும் மறவாத எனக்கு அவரைவிட கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.

மலேயா என்ற பெயரில் இன்றைய மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்றாக இருந்த காலத்திலேயே அங்கு வாழ்ந்த நம் தமிழர்களின் நலனுக்காகப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டவர் தந்தை பெரியார். அவரது இயக்கத்தின் தளபதியாக விளங்கிய, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் கோலாலம்பூர் சென்று உரையாற்றியபோது, அவரது பேச்சைக் கேட்கும் ஆவலுடன் அந்த மேடையில் அமர்ந்திருந்தவர் லீ குவான் யூ. அண்ணா அவர்களின் பேச்சாற்றலையும், தமிழர்கள் வாழ்வின் மீதான அவரது அக்கறையையும், உலகளாவிய சிந்தனைகளையும் அறிந்து அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சிறப்பித்தவர் லீ குவான் யூ. பேரறிஞர் அண்ணாவைத் தனது மூத்த சகோதரன் என்று சொன்னார். லீ குவான் யூ அவர்கள் மீது நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் பெரும் மதிப்பு உண்டு என்பதை, லீ குவான் யூ மரணத்தின்போது, அவரை ‘சிங்கப்பூரின் நாயகர்’ எனப் போற்றிய கலைஞரின் இரங்கல் அறிக்கை வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூர் வருகை தந்தபோது, லீ குவான் யூ அவர்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டியதுடன், தமிழர்களின் உழைப்பையும் போற்றினார். என்றும் தொடரும் இந்தத் தமிழுணர்வின் அடையாளமாகத்தான் உங்களில் ஒருவனான நானும் சிங்கைவாழ் தமிழர்களிடம் உரையாற்றினேன்.

Tamil Nadu CM Stalin takes bullet train ride in Japan; assures protection  of Tamil diaspora worldwide - The Hindu

மே 25-வியாழன்

உதயசூரியனின் கதிர்க் கைகள் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, பணிகளை நினைவுபடுத்தி எழுப்பின. காலைப் பொழுதில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திரு.சண்முகம் அவர்களைச் சந்தித்தேன். இங்குள்ள தமிழர்கள் தாய்த்தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் வந்து பண்பாட்டுப் பெருமையை அறிந்து கொள்ளவும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவிடவும் ஆர்வமாக இருப்பதை எடுத்துக்கூறிய அவர், மதுரைக்கும் சிங்கப்பூருக்குமிடையே நேரடி விமானச் சேவை போதுமான அளவில் அமைந்தால் அவர்களின் ஆர்வம், செயல்பாடாக நிறைவேறும் என்பதைத் தெரிவித்தார். இந்திய ஒன்றிய அரசிடம் இதனை வலியுறுத்தி, விரைவில் உரிய அளவில் விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் தெரிவித்து, அவரையும் முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைத்தேன். சிங்கப்பூரின் முன்னாள் அதிபரான தமிழர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் முனைவர் சுப.திண்ணப்பன். தான் தமிழ் மேல் கொண்ட பற்றுக்குக் காரணமே, திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சுதான் எனப் பூரிப்பாகச் சொன்னார். சிங்கையில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர். அவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி அவருக்குச் சிறப்பு செய்தேன். கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதை அவர் பாராட்டி, தமிழர் பெருமைக்கு இது ஒன்று போதும் என்று மனதாரப் புகழ்ந்தார்.

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளிதழ் அந்நாட்டுத் தமிழர்களின் குரலாக 1935 முதல் ஒலித்து வருகிறது. திருவாரூரில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து, அந்நாட்டு அரசுடன் இணைந்து தொண்டாற்றிய தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களால் வார ஏடாகத் தொடங்கப்பட்ட இந்த இதழ் இன்று நாளேடாக சிங்கப்பூர்-மலேசியா தமிழர்களிடம் தனி இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பயணம் பற்றி ‘தமிழ் முரசு’ இதழுக்கு ஒரு நேர்காணல் அளித்தேன்.

DMK achieved in a year, what AIADMK couldn't in 10 yrs'

தமிழர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தேன். சிங்கப்பூர் பயணம் முழுவதுமே சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அந்த உணர்வுடன், சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு விமானத்தில் புறப்பட்டோம். 7 மணி நேரப் பயணம். பல ஆயிரம் மைல்கள் கடந்திருந்தாலும் மனது தமிழ்நாட்டையே சுற்றி வந்தது. வெளிநாட்டில் இருநதாலும், டி.வி. சேனல்கள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், செல்போன் கால்கள் வழியாக தமிழ்நாட்டின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியபடியேதான் இருந்தேன். இரவு 11 மணிக்கு ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான ஒசாகா சென்றடைந்தோம். விமான நிலையத்தில், இந்தியத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் திரு.நிகிலேஷ் கிரி வரவேற்பளித்தார்.

 

மே 26 -வெள்ளி

ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ என்றால் அந்நாட்டின் தொழில் நகரம் ஒசாகா. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து இங்குள்ள முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தார். அதனால் இந்தப் பயணத்தில் ஒசாகாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். அங்குள்ள முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது. ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில், உற்பத்தி சார்ந்த துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்திருக்கின்றன. அதுபோல ஃபின்டெக் சிட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.

CM Stalin woos investors in Singapore; six MoUs signed | Latest News India  - Hindustan Times

சுறுசுறுப்பான உழைப்புக்குப் பெயர் பெற்றவர்களான ஜப்பானியர்களின் நேரம் தவறாமை மிகவும் கவர்ந்தது. திட்டமிட்ட நேரத்திற்கு மேல் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்காமல் மிகச் சரியாகத் தொடங்கி, கூட்டத்தின் நோக்கத்தைச் சரியாக வெளிப்படுத்தி, சரியான நேரத்தில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் அவர்களின் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. பொதுவாக, நானும் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாக அரங்கிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஜப்பானியர்கள் அதில் மிகவும் அக்கறை செலுத்தி உழைக்கிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று தமிழ்நாட்டில் நாம் சொல்வதை, ஜப்பானியர்கள் வாழ்க்கையாகவே கடைப்பிடிப்பதைக் கண்டேன்.

முதலீட்டாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு, அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்பு அமைந்தது. ஜப்பானில் பாலாஜி பவன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் அன்பர் குறிஞ்சி செல்வன் மற்றும் அவர்களின் துணைவியார், தமிழ்நாட்டு உணவு வகைகளை எங்களுக்கு வழங்கினர். ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் திரு.நோபுஹிகோ யமாகுஜி அவர்களுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பும் அன்றைய மதிய உணவு வேளையில் நடைபெற்றது. ஒசாகாவில் உள்ள பழமையான கோட்டையைப் பார்க்க வேண்டும் என்று துணை ஆளுநர் கேட்டுக்கொண்டார். திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் நிறைவடைந்ததும் நிச்சயம் கோட்டைக்குச் செல்கிறேன் என்று அவரிடம் தெரிவித்தேன். லஞ்ச் மீட்டிங்கில் தொழில் முதலீடு தொடர்பான உரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்தன.

On official Singapore visit to attract investors, Tamil Nadu CM Stalin  signs 6 MoUs

அதன் பின்னர், ஒசாகாவில் உள்ள கோமாட்சு என்ற பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குச் சென்றோம். கட்டமைப்புகளுக்குத் தேவையான நவீன இயந்திரங்களைத் தயாரிக்கும் கோமாட்சு நிறுவனம், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒரகடத்தில் தனது தொழிற்சாலையை அமைத்தது. 2007-ஆம் ஆண்டு நான்தான் அதனைத் திறந்து வைத்தேன். அதன் தலைமை நிறுவனம்தான் ஒசாகாவில் உள்ளது. அதன் இந்திய நிறுவனத்தின் (தமிழ்நாட்டில் உள்ளதன்) தலைவரும் அங்கு வந்திருந்தார். முக்கியப் பொறுப்பில் உள்ள மற்றவர்களும் வந்திருந்தனர். கோமாட்சு தொழிற்சாலையின் வாசலுக்கு கார் செல்லும்போதே, அதன் தொழிலாளர்கள் வரிசையாக நின்று கை தட்டி வரவேற்பளித்தனர். ஜப்பானிய பாரம்பரிய முறைப்படி, இரண்டு கைகளையும் முன்பக்கம் வைத்து, முதுகைச் சற்று சாய்த்து நிமிர்ந்து தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர். நானும் அவர்கள் அன்பை ஏற்று, அவர்கள் மரபுப்படியே நன்றி தெரிவித்தேன்.

நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயியால் தொடங்கப்பட்டது கோமாட்சு நிறுவனம். தன்னுடைய நிலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கருவிகளை உருவாக்கத் தொடங்கி, இன்று உலகளவில் பெயர் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயந்திரமும் எப்படி தயாரிக்கப்படுகிறது, அதனுடைய உதிரி பாகங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பணி எப்படி நடைபெறுகிறது என்பதை எங்களுக்கு விளக்கினர். தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தில் மாதந்தோறும் 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவில் உள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.

Tamil Nadu CM MK Stalin Meets Top Singapore CEOs; Invites Them To Invest in  State (See Pics) | 📰 LatestLY

மே 27- சனிக்கிழமை

மன்னராட்சியின் அடையாளங்களை இன்றளவும் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்று. போர்ச் சூழல் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ அரசர்கள் தங்கள் தலைநகர்களை மாற்றுவது உண்டு. நம் நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் தலைநகரங்கள் பற்றி பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதுபோலவே, ஜப்பான் நாட்டில் ஒசாகாவும் ஒரு காலத்தில் தலைநகராக இருந்துள்ளது. அதன் அடையாளம்தான் பழமையான கோட்டை. அதனைப் பார்க்கச் சென்றபோது, பல நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். ஜப்பான் நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களும் கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக வந்திருந்தனர். எங்களைப் பார்த்ததும், எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

“இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். அந்த மாநிலத்தின் முதலமைச்சர்” என்று அந்த மாணவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் துணைவியாரிடமும் மாணவ-மாணவியர் அன்பைப் பொழிந்தனர். “உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?” என்றும் கேட்டனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுடன் படம் எடுத்து மகிழ்ந்தோம். மாணவ-மாணவியரின் ஆனந்தக் கூக்குரல், மற்ற சுற்றுலாப் பயணிகளின் பார்வையையும் எங்களை நோக்கித் திருப்பிவிட்டது.

M.K.Stalin on Twitter: "It was a pleasure to meet my long-time friend and  Singapore's Minister for Transport and Minister-in-Charge of Trade  Relations Thiru S. Iswaran. We had already met when I had

ஒசாகா கோட்டைக்குள் ஜப்பானிய அரசர்கள் பற்றிய குறிப்புகள், மன்னர்களின் உடைகள், அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், சந்தித்த போர்க்களங்கள், ராஜமுத்திரை பதித்த கடிதங்கள், எதிரிகளாலும் இயற்கைச் சீற்றத்தாலும் கோட்டை தாக்கப்பட்டு உருமாற்றங்கள் அடைந்த விவரம் எனப் பலவும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. ஜப்பானைச் சுற்றிலும் கடல் என்பதால் பழங்காலத்திலேயே பிறநாடுகளுடன் வாணிபத் தொடர்பு இருந்துள்ளது. பண்டமாற்று முறையைக் கடைப்பிடித்துள்ளனர். தொல்லியல் ஆய்வுகள் – வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவுடன் நிறைய அளவில் பண்டமாற்று வாணிபம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்பதையும் கோட்டையில் இருந்தவர்கள் விளக்கினர். கீழ்த்திசை நாடுகள் நோக்கி கடல் வழியே சோழ மன்னர்கள் பயணித்தது நினைவில் நிழலாடியது.

கோட்டையை சுற்றிப் பார்த்தபிறகு, ஒசாகாவில் உள்ள ‘தி இந்தியன் கிளப்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவுக்குப் புறப்பட்டோம். ஒரு மணி நேரப் பயணத்தில் விழா அரங்கிற்குச் சென்றோம். ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த வரவேற்பு மகிழ்வைத் தந்தது. விழாவில், தமிழர் கலை வடிவமான பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. ஜப்பான் நாட்டில் பரதநாட்டியக் கலையை முதன்முதலில் கற்றுக் கொண்டவரான அகிமி சகுராய், அதனை ஜப்பானிய மாணவியர் பலருக்கும் கற்றுத் தந்திருக்கிறார். அவர்கள் மிகச் சிறப்பாக ஆடினர். விழாவுக்கு வந்திருந்த அகிமி சகுராய் அவர்களை வாழ்த்தினேன். இந்தியன் கிளப் நிகழ்வில் குழுமியிருந்தவர்களிடம், அவர்களின் உழைப்பை, வளர்ச்சியைப் பாராட்டி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துக்கூறுங்கள் எனத் தெரிவித்தேன். எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும் அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கமாக இருந்தது.

CM Stalin invites Japanese investors to GIM 2024- The New Indian Express

மே 28-ஞாயிறு

ஒசாகாவில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த பணியாளர்கள் மிகுந்த அன்புடன் வழியனுப்பினர். ஒசாகா கான்சல் ஜெனரல் திரு.நிகிலேஷ் கிரி அவர்களும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடனிருந்து வழியனுப்பினார். அங்கிருந்து டோக்கியோவுக்கு அதிவேக புல்லட் ரயிலில் பயணித்தோம். வரும் வழியில் உள்ள ஊர்களில் உள்ள வீடுகளையும் மக்களையும் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் உள்ள இடைவெளியில்கூட, தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார்கள். அதனால் எந்தப் பக்கம் பார்த்தாலும் பசுமை கண்களை நிறைத்தது. ஜப்பானில் உள்ள மலைகளில் உயரமான ப்யூஜி மலையை பயண வழியில் காண முடிந்தது. இந்தியாவில் உயரமான இமயமலை, பனிமலையாகும். ஜப்பானின் ப்யூஜி எரிமலையாகும். ஜப்பானியர்கள் இந்த மலையைப் புனிதமாகக் கருதுகிறார்கள். பயண வழியெங்கும் பல ஊர்களை இணைப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள பாலங்களைத் தொடர்ந்து காண முடிந்தது.

ஒசாகா-டோக்கியோ இரண்டு நகரங்களுக்கும் இடைப்பட்ட தூரம், ஏறத்தாழ 500 கிலோ மீட்டர். சென்னைக்கும் கோவைக்கும் உள்ள தொலைவு. புல்லட் ரயில் பயணத்தில் இரண்டரை மணிநேரத்தில் 500 கிலோமீட்டரை கடந்து டோக்கியோ வந்தடைந்தோம். நம் நாட்டின் நினைவு வந்தது. இப்போதுதான், 5 மணி நேரம் 50 நிமிட நேரப் பயணத்தில் 500 கிலோ மீட்டரைக் கடக்கும் ‘வந்தேபாரத்’ ரயில் அறிமுகமாகியிருக்கிறது. ஜப்பானில் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, ரயில்தான். பேருந்துகள் குறைவு. எந்த இடத்திற்கும் ரயிலில் பயணிக்கும் வசதி ஜப்பான் மக்களுக்கு வாய்த்திருக்கிறது. நம் நாட்டில் நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டங்கள் நிறைய உள்ளன. அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நத்தை வேகத்திலான ரயில்வே திட்டங்கள் வேகம் பெற்று, இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். டோக்கியோ சென்றடைந்ததும், இந்தியாவில் புல்லட் ரயில் ஏழை-எளியவர்களும் பயணம் செய்யும் வகையில் அமைய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்.

Stalin: Tamil Nadu CM MK Stalin asks Komatsu to expand its Oragadam plant |  Chennai News - Times of India

டோக்கியோவில் இந்தியாவுக்கான தூதர் திரு.சிபி ஜார்ஜ் அவர்கள் வரவேற்பு அளித்தார். ஜப்பான் தலைநகரில் உள்ள தமிழர்களும் அன்புடன் வரவேற்றனர். தமிழ்ச் சங்கங்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் அமைப்பினர் திரளாகத் திரண்டு, இந்த நிகழ்வை சிறப்பான முறையில் நடத்தினர். பண்பாட்டு விழாவை அருமையான தமிழ்ப்பாடலுடன் தொடங்கினர். பறை இசையால் அரங்கம் அதிர்ந்தது. நடனங்கள், தற்காப்புப் பயிற்சிகள் எனத் தமிழர் கலைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஜப்பான் தமிழர்களின் கலையார்வத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த நிகழ்ச்சிகளை என் செல்போனில் ஆர்வத்துடன் வீடியோ எடுத்தேன்.

அரசு நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என்று பரபரப்பாகவும் நேர நெருக்கடியுடனும் இருந்து வரும் எனக்கு, இந்தக் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதை என்னுடைய பேச்சில் குறிப்பிட்டேன். ஜப்பான் நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக்கூறி, டோக்கியோவில் வாழும் தமிழர்கள் கீழடி அருங்காட்சியகத்தையும், விரைவில் அமையவிருக்கும் பொருநை அருங்காட்சியகத்தையும் காண்பதற்குத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். விழா ஏற்பாட்டாளர்கள், “பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜப்பானுக்கு வந்தது நீங்கள்தான்” என்றனர். தமிழர்களின் அன்பு மழையில் நனைந்து, செல்ஃபி எடுத்துக் கொண்டபோது, டோக்கியோவில் ஒரு தமிழ்நாடு என்ற உணர்வு ஏற்பட்டது.

Japan Key Player In Tn's Push To 1 Trillion Dollar Economy: Cm | Chennai  News - Times of India

மே-29 திங்கள்

ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான ‘ஜெட்ரோ’வின் சேர்மனுடனான சந்திப்புடன் காலைப் பொழுது தொடங்கியது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியையும் நமது அரசின் முயற்சிகளையும் ஜெட்ரோ சேர்மன் பாராட்டினார். ஜப்பான் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் ஜெட்ரோ நிறுவனத்தை முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன். அதன் சேர்மனுடன், டோக்கியோவில் முதலீட்டாளர் கருத்தரங்கத்திற்குச் சென்றேன். ஏறத்தாழ 250 தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்றிருந்தனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா பேசினார். அவர் டோக்கியோவில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக சிங்கப்பூர், ஒசாகா ஆகிய இடங்களில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்புகள், கருத்தரங்குகளில் பேசியதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா இடங்களிலும் அவர் பேசும்போது, “தமிழ்நாட்டில் தொழில்தொடங்க வாருங்கள். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. முதலமைச்சர் அவர்கள் அத்தகைய கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் முதலீடு செய்யுங்கள். பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புத் தரும் தொழில் நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிக்கத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் நான் காவிரி டெல்டாவைச் சேர்ந்தவன். முதலமைச்சர் அவர்களும் டெல்டாவிலிருந்து வந்தவர்கள். அதனால், வேளாண்மை சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் முதலீடு செய்து ஊக்குவிக்க வேண்டும். நீண்ட கடற்கரையைக் கொண்டது தமிழ்நாடு. ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான முதலீடுகளுக்கும் முன்வரவேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

Tokyo: Tamil Nadu Chief Minister MK Stalin during an event at the NEC  Future Creation Hub #Gallery

டோக்கியோ முதலீட்டாளர் கருத்தரங்கில் நான் பேசுகையில், “உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். அதுபோல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த துறைகளுக்காக சென்னையில் உங்கள் நிறுவனங்களின் அலுவலகம் அமைய வேண்டும். எங்களிடம் மனித வளம் நிறைய உள்ளது” எனக் கேட்டுக்கொண்டு, முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற லஞ்ச் மீட்டில், முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

அவர்களிடம் நான், “மேயர்கள் மாநாட்டிற்கு சென்னை மேயராக ஜப்பானுக்கு வந்திருக்கிறேன். துணை முதலமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்காக வந்திருக்கிறேன். அப்போது ஜப்பான் செய்த நிதியுதவிதான், பாதுகாப்பான குடிநீரைப் பல மாவட்ட மக்களுக்கு வழங்கியது. அவர்கள் இன்னமும் உங்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள். அதுபோலவே, சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியதிலும் ஜப்பானின் உதவியை மறக்க முடியாது. ஜப்பானுக்கு நான் வந்தபோதெல்லாம், நான் என்ன கேட்டேனோ அதை ஜப்பான் நிறைவேற்றியிருக்கிறது. எனக்கு மிக நெருக்கமான நாடு ஜப்பான். சென்னையில் என் வீட்டுக்குப் பக்கத்து கட்டடத்தில்தான் ஜப்பான் நாட்டின் தூதரகம் உள்ளது” என்றேன்.

திங்கள் மாலையில் ஜப்பான் தொழில்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடிச் சந்திப்பு நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

Omron to establish medical devices manufacturing unit in Tamil Nadu- The  New Indian Express

மே 30- செவ்வாய்

காலையில் என்.இ.சி. எனப்படும் எதிர்காலத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றோம். அந்தமான் தீவுகள் உள்பட உலகின் பல நாடுகளிலும் கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் எந்தளவில் பயன்படுத்தப்படுகின்றன, எதிர்காலத்தில் அவை எந்தெந்த வகையில் உதவும் என்பதை என்.இ.சி. நிறுவனத்தினர் விளக்கிக் கூறினர். உதாரணமாக, தற்போது பயோ-மெட்ரிக் முறையில் நாம் கைரேகையைப் பதிவு செய்து அலுவலகத்திற்குச் செல்கிறோம். இதன் அடுத்தகட்டமாக, மனிதர்களின் முகத்தை அடையாளம் கண்டு அனுமதிக்கும் தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. விமான நிலைய கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டமாகக் காத்திருக்கும் பொழுதுகளில், கொரோனா போன்ற கட்டுப்பாடுகள் நிலவும் நேரங்களில், விமானத்திற்கான போர்டிங் பாஸ் பரிசோதனை, பாதுகாப்பு பரிசோதனை உள்பட எல்லாவற்றிலுமே ஒருவரின் முகத்தை அடையாளமாக வைத்து விரைவாக முடித்துவிடலாம். உரிய அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாதவர்களை எந்த இடத்திலும் உள்ளே விடாமல் தடுத்து விட முடியும்.

இந்தியாவில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் ஜப்பானின் என்.இ.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க என்.இ.சி. முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் உள்ள தங்கள் அலுவலகத்துடன் இதுகுறித்துப் பேசி, நல்ல முடிவைத் தெரிவிப்பதாக என்.இ.சி. நிறுவனத்தினர் கூறினர்.

M.K.Stalin on Twitter: "Had a constructive meeting with JETRO's Chairman  Mr. Ishiguro Norihiko and expressed my gratitude for JETRO's invaluable  support in organising the investment conclaves in Osaka and Tokyo. The  assistance

மாலையில் ஓம்ரான் என்ற நிறுவனத்துடன் சந்திப்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனைகள் சார்ந்த கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வு நிறைவடைந்தவுடன், டோக்கியோவில் உள்ள உலகின் மூன்றாவது உயரமாக கட்டடமான ஸ்கை ட்ரீ என்ற கட்டடத்திற்குச் சென்றோம். அதன் உச்சியில் இருந்து பார்த்தபோது, டோக்கியோ நகரத்தின் பேரழகை ரசிக்க முடிந்தது. நகரக் கட்டுமானம் எப்படி இருக்கிறது என்பதையும் காண முடிந்தது. உயரமான கட்டடத்தில் நான் நிற்பதைவிட, தமிழ்நாட்டை இந்திய அளவில், உலக அளவில் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற உன்னத இலட்சியமே மனதில் தோன்றியது.

நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவுடன்தான் கழகம் ஒவ்வொரு உயரத்தையும் எட்டுகிறது. அதனால்தான், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும் அதனடிப்படையிலான பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மேற்கொண்ட பயணத்தை விரிவான கடிதமாக எழுதியிருக்கிறேன். சூரியன் உதிக்கும் நாடு என்று ஜப்பானுக்குப் பெயர் உண்டு. நாம் உதயசூரியனின் ஒளியால் விடியல் கண்ட தமிழ்நாட்டுக்காரர்கள். இன்னும் சிறிது நேரத்தில், இங்கே பொழுது புலரும். தாய்த் தமிழ்நாட்டை நோக்கிய பயணம் தொடங்கும். கடல் கடந்த பயணத்தால், தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் வருகிறேன்.

TN CM Japan visit: டோக்கியோவில் உள்ள NEC Future Creation மையத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின்!, tn cm japan visit nec future creation hub in tokyo  tamil nadu chief minister mk stalin visited

தமிழ்நாட்டின் மீதும் – தமிழ்நாடு அரசின் மீதும் – தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-இல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு “வருக வருக” என அனைவரையும் அழைத்து, “கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது” என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்.

உடன்பிறப்புகளின் முகம் காண உங்களில் ஒருவனான நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ