கோரமண்டல் தொழிற்சாலை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எண்ணூர் கோரமண்டல் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா கசிவு ஏற்பட்ட விவகாரத்தில், ஒரு பக்கம் கோரமண்டல் நிறுவனத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக தி மு க அரசால் வழக்குகள் தொடரப்படுகிற நிலையில், தி மு க வின் பாராளுமன்ற உறுப்பினர் அந்த நிறுவனத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இரட்டை நிலைப்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்களை சமாதானப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய மாநில அவர்களை வழக்கு தொடர்ந்து மிரட்டி பார்ப்பதும், பிரச்சினை என்ன? எங்கிருந்து, எப்படி, ஏன் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா கசிவு ஏற்பட்டது என்று கண்டுபிடித்து இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது இருப்பதை நிறுவனத்தின் நிர்வாகத்தின் மூலமும், அரசு இயந்திரத்தின் மூலமும் உறுதி செய்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய அரசு, நிலைமையை கட்டுப்படுத்தாமல் மேலும் மேலும் சிக்கலை உண்டாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரச்சினையை நீடிக்க விடாமல் போராடும் மக்களின் மீது பதிந்த வழக்குகளை உடனடியாக ரத்து செய்வதோடு, குழாய்களில் ஏற்பட்ட கசிவு குறித்து வெளிப்படையான தகவல்களை அளிக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.