சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்கான பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வெளியே வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டி அகற்றப்பட்டு, முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைப் பெறுவதற்காக செயல்பட்டு வந்த முதல்வர் தனிப்பிரிவில், அண்மையில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களைக் குறிப்பிட்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், தலைமைச் செயலக வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படாமல், வெளியே வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் மனுக்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நடைமுறைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், மனுக்களின் நிலை குறித்து தெளிவான தகவல்களைப் பெற சிரமம் ஏற்பட்டதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், பொதுமக்களின் கருத்துகளை பரிசீலித்த அரசு, புதிய நடைமுறையை திரும்பப் பெற்று பழைய முறையை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. இதையடுத்து, தலைமைச் செயலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் தலைமைச் செயலகத்திற்குள் சென்று முதல்வர் தனிப்பிரிவில் தங்களது மனுக்களை நேரடியாக அதிகாரிகளிடம் வழங்க முடியும். மேலும், மனு பெற்றதற்கான ரசீதையும் வழக்கம்போல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது – தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
