ஈரோடு அருகே சோலாரில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்தில், பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் பாலு என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பால் குளிரூட்டப்பட்டு பால்கோவா, பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக சமீபத்தில் புதிதாக இயந்திரங்களும் பாய்லரும் நிறுவி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்களில், ஒருவர் பாய்லரை இயக்கி உள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் பாய்லரை இயக்கிய கருமாண்டாம்பாளையத்தை சேர்ந்த ராமன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேற்கூரை மற்றும் அருகில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. மற்றொரு தொழிலாளி சற்று தொலைவில் இருந்ததால் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார், உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாய்லர் வெடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.