மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட இந்த பத்மபூஷன் விருதை முதலில் அவருக்கே சமர்ப்பிக்க விரும்புகிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம் ஆண்டிற்கான தேசிய விருதான பத்மபூஷன் விருது நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கப்பட்டது.
விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து விருது பெற்ற விஜயகாந்த் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லித் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவை முடித்துக் கொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் மேலும் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
தேசிய விருதுடன் சென்னை விமானம் நிலையத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்திற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து கேப்டன் கேப்டன் என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் மீது மலர்கள் தூவி வரவேற்றனர்.
விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திறந்தவெளி வாகனம் மூலம் கோயம்பேட்டில் உள்ள அவருடைய நினைவிடம் வரை தொண்டர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
இது குறித்து பிரேமலதா பேசிய போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட இந்த தேசிய விருதை முதலில் விஜயகாந்த்துக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும், விஜயகாந்தின் மீது அன்பு கொண்ட உலகத் தமிழர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த விருதை இரண்டாவதாக சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.
இந்த விருதை அவர் உயிருடன் இருந்து வாங்கி இருந்திருந்தால் மிகவும் பெருமையாக இருந்திருக்கும். மேலும் எல்லோரும் வரவேற்கக் கூடியதாகவும் இருந்திருக்கும் என்று மேலும் கூறினார்.இந்த விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து நடிகர் விஜயகாந்த்க்கு கொடுக்கப்பட்ட விருதை தொண்டர்கள் மத்தியில் கையில் ஏந்தி காண்பித்த வண்ணம் விமான நிலையத்திலிருந்து பிரேமலதா வெளியே வந்தார்.
அப்பொழுது விமான நிலையத்தில் இருந்து பிரேமலதா வாகனத்தை பின்தொடர்ந்த கட்சி தொண்டர்களின் வாகனங்கள் பேரணியாக செல்ல முயற்சித்தனர். பேரணிக்கு அனுமதி எதுவும் காவல்துறையிடம் வாங்காததால் போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வழியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு அங்கிருந்து செல்வதற்கு முயற்சி செய்தனர் அப்பொழுது போலீசாருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் அனுமதி வாங்காமல் பேரணி செல்ல கூடாது என எடுத்து கூறிய நிலையிலும் தேமுதிகவினர் அதனை சிறிதும் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு ஒவ்வொரு வாகனமாக போலீசார் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு வழி செய்தனர் இதன் பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டு விமான நிலையத்திலிருந்து தேமுதிக கட்சி தொண்டர்களின் வாகனங்கள் வெளியேறியது.இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது