பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, கடந்த 24ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மோகன் ஜியை சொந்த ஜாமினில் விடுதலை செய்து, திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மோகன் ஜி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மோகன் ஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும் என்றும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், பழனி காவல் நிலையத்தில் தினந்தோறும் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.
மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் கூறக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம் என்றும், உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்