பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்மீக மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் முறேகடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகக் காவல் துறை தங்களது அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.


இந்த மெகா நில மோசடி மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கினை உடனடியாகச் சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தையே ஏமாற்றி நடத்தப்பட்ட இந்த நில அபகரிப்பு விவகாரத்தின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கூண்டோடு பிடிக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.35 ஏக்கர் நிலமானது, தற்போதைய சந்தை நிலவரப்படி நூறு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புடையதாகும். இந்த நிலத்தின் சட்டப்பூர்வமான ‘தக்கார்’ (நிர்வாக அதிகாரி) ஆகப் பழனி கோயில் நிர்வாக அதிகாரியே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சேதுபதி மற்றும் கே. வெள்ளத்துரை ஆகிய இருவர், இந்த நிலத்தை ஒரு தனியார் அறக்கட்டளையிடமிருந்து வாங்கியதாகக் கூறி, போலித் தோற்றங்களை உருவாக்கித் தனி நீதிபதியிடம் ஒரு உத்தரவைப் பெற்றனர். அதை வைத்துப் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அவசர அவசரமாக இந்த நிலத்தைப் பத்திரப்பதிவும் செய்து முடித்தனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பாய்ந்த உத்தரவு
இந்த முறைகேடான பத்திரப்பதிவை எதிர்த்துப் பழனி கோயில் நிர்வாக அதிகாரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு, இந்த நிலப் பரிமாற்றம் முற்றிலும் முறைகேடானது எனக் கூறி, பத்திரப்பதிவை முழுமையாக ரத்து செய்து இன்று அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், “வழக்கமான சார்பதிவாளரைத் திட்டமிட்டு விடுப்பில் அனுப்பிவிட்டு, தற்காலிகப் பொறுப்பில் வந்த அதிகாரி மூலம் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக நீதிமன்றத்தை ஏமாற்றிப் பெறப்பட்ட உத்தரவு.
இதற்குத் துணையாக இருந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டும் போதாது” என்று நீதிபதிகள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர். நீதிமன்றத்தின் இந்த கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் காவல் துறையிடமிருந்து வழக்கை மாற்றி, மாநிலத்தின் உயரிய புலனாய்வுப் பிரிவான சிபிசிஐடி விசாரிக்கத் தமிழக டிஜிபி டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடி வளையத்திற்குள் வரும் அதிகாரிகள்!
பத்திரப்பதிவுத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் பின்னணிகள் இல்லாமல் இவ்வளவு பெரிய நில மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. திட்டமிட்டு விடுப்பில் சென்ற சார்பதிவாளர் யார்? பொறுப்புக்கு வந்து உடனடியாகக் கையெழுத்திட்ட தற்காலிக அதிகாரிக்குக் கொடுக்கப்பட்ட ‘ஆஃபர்’ என்ன? நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தந்து ஏமாற்றிய இடைத்தரகர்கள் மற்றும் போலி அறக்கட்டளை ஆசாமிகள் யார்? என்ற பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே டிஜிபி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதால், இந்த நில மோசடியில் தொடர்புடைய சார்பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பின்னணி ஆசாமிகள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
