சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் சுமார் 95 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்காமல் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்விப் பணிக்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்பு அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடிப்பதும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழங்க மறுப்பதும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அவலநிலையை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
ஏற்கனவே, கடுமையான நிதி நெருக்கடி, மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை வழங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் படிப்படியாக அதன் தனித்தன்மையை இழந்துவருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்தியாவின் பழமையும், பெருமையுமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக விடுவிப்பதோடு, சிறப்பு நிதியை உருவாக்கி அப்பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியை சீரமைத்திட வேண்டும் என உயர் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா்.
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது – முதல்வர் வாழ்த்து



