பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவு பிறப்பிக்க வேண்டும், ஓபிஎஸ் தொடர்புள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை கட்சி விதியில் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வரும்வரை பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது, அதிமுக உறுப்பினர் அட்டையை மீண்டும் இணையதளம் மூலம் விநியோகிக்க அனுமதிக்க வேண்டும், தேர்தல் சின்னம் ஒதுக்க அளிக்கப்படும் ஏ,பி படிவங்களில் கையெழுத்திட பழனிசாமியை அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர், அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, பொதுச்செயலாளராக தேர்ந்தெடுகப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர்களான அதிமுக துணைப் பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளாரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டு அதற்கான வெற்றி படிவத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.