Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகை: 3 நாட்களில் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்! 

பொங்கல் பண்டிகை: 3 நாட்களில் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்! 

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் சிறப்பு பேருந்துகள் மூலம் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து, கடந்த 10ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையங்களுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சிரமம் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 3 நாட்களில் 6.4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களில் சென்னையில் இருந்து 11 ஆயிரத்து, 463 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று நள்ளிரவு 12 மணி வரை வழக்கமாக இயக்கப்படும்  2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,858 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

போகி பண்டிகையை முன்னிட்டு நேற்று மட்டும் சிறப்பு பேருந்துகள் மூலம் 2,17,250 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதேபோல் கடந்த 10,11, 12 ஆகிய 3 நாட்களில் ஒட்டு மொத்தமாக சென்னையில் 6,40,465 பயணிகள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

MUST READ