தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் பலி- 3 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பழைய சுற்றுச்சுவர் அருகே பெரிய அளவிளான புதிய சுற்றுச்சுவர் கட்டும்பணி நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பணியில் இருந்த கொல்லி ஜெகநாதன் (53), நக்கிலா சத்யாம் (48) ரபாக்கா கண்ணையா (49) மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த பிஸ்கோஸ் (40), பரூன் கோஸ் (28) ஆகிய 5 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், திட்ட மேலாளர் சாதிக் உல் அமீர் , பொறியாளர் அருணாச்சலம் , ஆகிய மூன்று பேர் மீதும் 288, 304(ii) ஆகிய இரண்டு பிரவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.