ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ள 381 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 01.10.2024 காலை 8.30 மணி முதல் 30.11.2024 காலை 8.30 மணி வரை பதிவான மழையின் அளவு – 688.95 மி.மீ. என்றும், இன்று காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை பெய்த மழையின் அளவு சராசரியாக 84.86 மி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக 553 இடங்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, 172 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 381 இடங்களில் துரிதமாக மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மழையின் காரணமாக 99 மரங்கள் விழுந்துள்ளதாகவும், அனைத்து மரங்களும் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் இரயில்வே மேம்பாலப் பணி காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வியாசர்பாடி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி பாலம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கபோதை, மழைநீர்த் தேக்கம் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 337 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 918 நபர்கள் அழைத்துவரப்பட்டு 29 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 165 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், இன்று காலை 3 வேளைகளில் மொத்தம் 6,35,300 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் முதலமைச்சர் உத்தரவின்படி சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், இவற்றின் மூலம் 79,076 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மழைக் காலத்தினை முன்னிட்டு, 15.10.2024 முதல் 29.11.2024 வரை சென்னையில் மட்டும் இதுவரை 2,615 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1,39,187 நபர்கள் பயனடைந்து உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 15 முதல் இன்று வரை பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணிற்கு 50,533 புகார்கள் பெறப்பட்டு, 39,738 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10,795 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட இதுவரை 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 642 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
