தொலைபேசியை எடுத்தால் வணக்கம் என்று அழையுங்கள் என தமிழைத் தேடி பிரச்சார பயணத்தின்போது கடலூரில் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் ராமதாஸ் சென்னையிலிருந்து மதுரை வரை தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் 3வது நாளாக இன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பரப்பரை பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிஞர்கள் உள்ளனர். அவர்கள் கலப்பு மொழியைத்தான் பேசுகின்றனர். தமிழ் மெல்லச்சாகவில்லை. வேகமாக செத்து வருகின்றது. லண்டனில் நுழைந்தால் பெயர் பலகை எவ்வாறு இருக்குமோ அப்படி தமிழகத்தில் உள்ளது. எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் தமிழில் மற்ற மொழியை கலக்காதீர்கள். தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால் எனது தலையை அடமானம் வைத்து 5 கோடி தருவேன் கருப்பு மையை எடுத்துக்கொண்டு தமிழ் மொழி தவிர வேறு மொழி எங்கு உள்ளதோ அதனை அழியுங்கள். இறுதியாக தொலைபேசியை எடுத்தால் வணக்கம் என்று அழையுங்கள் ஹலோ என்று கூறாதீர்கள்” எனக்கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
