Homeசெய்திகள்தமிழ்நாடு"ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்" - கனிமொழி அட்வைஸ்

“ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்” – கனிமொழி அட்வைஸ்

-

- Advertisement -

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் வரும் அரசியல் ‘ரீல்ஸ்’களைப் பார்த்து முடிவெடுப்பது மட்டும் போதாது. அவர்கள் சமூகத்தின் நிஜமான அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளவும், சரியான விவாதங்களை மேற்கொள்ளவும் பெற்றோர்கள் அவர்களுடன் அமர்ந்து அரசியல் பேச வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்."ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்" - கனிமொழி அட்வைஸ்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

we-r-hiring

தமிழகம் முழுவதும் உள்ள 78 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் திமுக ஆட்சிக் கால திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது, தேர்தல் பணியில் ஈடுபட்ட மகளிர் அணியினருக்கு நன்றி கூறுவது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி தவெக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவின் பலம் குறையவில்லை”
கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி, மகளிர் அணி கூட்டங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று சிலர் நினைப்பதாகவும், ஆனால் இன்று அரங்கம் நிரம்பியிருப்பது திமுக மகளிர் அணியின் வலிமையை காட்டுவதாகவும் கூறினார்.  “ஆட்சியில் இல்லாத நிலையிலும் திமுக தலைவரை பார்க்க பல மாநிலங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். வந்தவர்களையும் பார்த்திருக்கிறோம், போனவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் திமுக எப்போதும் நிலைத்து நிற்கும் இயக்கமாகவே இருக்கும்” என்றார்.

மு.க.ஸ்டாலின் குறித்த பாராட்டு
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்று கூறினார். “இன்று யார் ஆட்சியில் இருந்தாலும் முக்கியமான பிரச்சினைகளில் மு.க.ஸ்டாலின் என்ன பேசப் போகிறார் என்பதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். டெல்லியிலும் தமிழகத்திலும் அவரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறது” என்றார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து விமர்சனம்
பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து பேசிய கனிமொழி, சமீபத்தில் ஒரு தவெக நிர்வாகி பல பெண்களை தவறாக படம்பிடித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சுட்டிக்காட்டினார்.“அதற்கு இன்னும் உரிய பதில் இல்லை. அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை தமிழகம் மறக்கவில்லை. அந்த நிலையை கடந்து வந்துள்ளோம். மீண்டும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ளும் நிலை உருவாகி வருவதாக அச்சம் இருக்கிறது” என்றார்.

திமுக திட்டங்களையே பின்பற்றுகிறார்கள்
மேலும், தற்போதைய அரசின் சில திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சிதான் என்றும் அவர் கூறினார். பிங்க் பேட்ரோல் போன்ற திட்டங்களின் அடிப்படையில்தான் இன்று புதிய பெயர்களில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் தமிழ்நாட்டின் சமூகநலத் திட்டங்களை பின்பற்றி வருகின்றன. அந்த வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது திமுக ஆட்சிதான்” என்றார்.

” பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள் ”
உரையின் இறுதியில் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்து பேசிய கனிமொழி, “70 ஆண்டுகளாக சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்படி வந்தன என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் அரசியல் பேசுங்கள். அரசியல் என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பேசப்பட வேண்டிய விஷயம் அல்ல” என்றார். ரீல்ஸ் எடுப்பது முக்கியம்தான். சமூக வலைதளங்களில் இருப்பதும் அவசியம்தான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. உங்களுடைய குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அரசியல் குறித்து பேசுங்கள். சமூகத்தை அரசியல்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. அப்போதுதான் அடுத்த தலைமுறை சரியான முடிவுகளை எடுக்க முடியும்” என கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

MUST READ