Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்" - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

-

- Advertisement -

ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. திமுக பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்."இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்" - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளில் மகளிரணியின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்டாா். மேலும், கட்சியினர் இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் தற்போதைய ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

we-r-hiring

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என கூறிய அவர், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். “தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகின்றனர். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது. தவெகவினரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது” என அவர் கூறினார்.

மேலும், பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களில் தவெக நிர்வாகிகளின் பெயர்கள் அடிபடுவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் கட்சி தாவல்கள் குறித்தும் பேசிய மு.க.ஸ்டாலின், “கை விரலில் வைத்த மை அழிவதற்குள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஒரு மாதத்திற்குள் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் சேரும் அளவுக்கு என்ன ஆஃபர் கொடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் விஜயை நேரடியாக விமர்சித்த அவர், “தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ‘ஷாப்பிங்’ செய்து வருகிறார். பாஜகவின் ஜெராக்ஸ் காப்பியாக முதலமைச்சர் செயல்படுகிறார்” என்று குற்றம்சாட்டினார். கல்வி நிதி தொடர்பாக ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசிய அவர், “நிபந்தனையின்றி கல்வி நிதியை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டும். இதுதான் ஆட்சி நிர்வாகம். இது சினிமா அல்ல” என்று குறிப்பிட்டார்.

மேலும், முதலமைச்சர் விஜயின் சமீபத்திய டெல்லி பயணம் குறித்தும் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், “நான் முதலமைச்சராக இருந்தபோது டெல்லி சென்றால், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்கச் செல்கிறார் என்று விஜய் விமர்சித்தார். இப்போது அவர் டெல்லி சென்றது எதற்காக? கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கவா?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் திராவிட மாடல் உருவாக்கிய புளூ பிரிண்ட்டில்தான் செயல்பட முடியும். தற்போது தமிழகம் பார்த்திராத அளவுக்கு ஒரு மாதத்திலேயே மக்கள் அதிருப்தியை சம்பாதித்த அரசு இது. திமுக பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளாா்.

தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் –  விஜயை விமர்சித்த கனிமொழி

MUST READ