புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 ஆக உயர்வு
புதுச்சேரியில் மீனவர்களுக்கு படகுகளில் செல்ல டீசல் தர தனியாக விநியோக மையம் கட்டுமானப்பணியை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவங்கிவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லட்சுமி நாராயணன், “புதுச்சேரியிலுள்ள மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கு கடலில் செல்ல மானிய விலையில் டீசல் தருகிறோம். இதர இடங்களில் சென்று வாங்கி படகுகளில் ஏற்றுவது சிரமமான காரியம். அதனால் 3 இடங்களில் முதல் கட்டமாக அந்த மீனவ கிராமப்பகுதிகளிலேயே டீசல் தரும் மையம் அமைக்கிறோம்.
குறிப்பாக நல்லவாடு, காலாப்பட்டு, வீராம்பட்டினத்தில் தற்போது அமைகிறது. மத்திய அரசிடம் பேசி இத்திட்டத்தை தொடங்கி உள்ளோம். டீசல் மானியம் ரூ. 12 தருகிறோம். மீனவ மக்களின வசதிக்காக அவர்களுக்காக இந்த பங்க் அமைகிறது. 3 மாதங்களில் அமையும்.வரும் புதன்கிழமை முதல் ரூ. 6500 மீன்பிடித்தடைக்கால நிவாரணம் கிடைக்கும். இத்தொகை முன்பு ரூ. 5500 இருந்தது. தற்போது ஆயிரம் உயர்த்தி தருகிறோம்” என்றார்.