Homeசெய்திகள்தமிழ்நாடுமுல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க...

முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் – சசிகலா!

-

ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு - சசிகலா இரங்கல்..

முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்காக மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என சுற்றுசூழல் துறையிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளதாகவும், இதன் காரணமாக வரும் 28ஆம் தேதி சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விசாரணை செய்ய இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் வஞ்சிக்கும் செயல். திமுக தலைமையிலான அரசு கேரள அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கேரள அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகப்பெரிய சட்டப்போரட்டத்தை நடத்தியதன் விளைவாக முதலில் 142 அடி உயர்த்திக்கொள்ளவும் மேலும் அணையை வலுப்படுத்திய பின்னர் 152 அடி வரை உயர்த்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இது போன்று புரட்சித்தலைவி அவர்கள் எடுத்த உறுதியான முயற்சிகளால் அம்மா அவர்களுடைய ஆட்சிக்காலத்திலேயே 142 அடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசன டிச்கெட் விலை உயர்வு – சசிகலா கண்டனம்

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு தொடர்ந்து அணையின் பலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தும் அணையின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்து அறிக்கை அளித்து வரும் நிலையில், தற்போது உறுதியாக இருக்கும் அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொள்வதை பார்க்கும்போது அணையின் நீர் மட்டத்தை 152 அடிக்கு உயர்த்தாமல் தடுப்பதற்கான உள்நோக்கம் இருப்பதாகத்தான் அறிந்துகொள்ள முடிகிறது. இது தமிழக விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் செயலாகும். இதில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், புதியதாக அணை கட்டுவது என்பது, நமது தென் மாவட்டத்தை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாகத்தான் இதை பார்க்கமுடிகிறது.

அதேபோன்று, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை குடிநீர் தேவைக்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் 60,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றுவரும் நிலையில் விவசாயிகள் அமராவதி அணையை பெரிதும் நம்பி இருக்கின்றனர். அமராவதி அணைக்கான நீர் ஆதாரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள கேரள மலைப்பகுதிகளில் உருவாகும் சிலந்தி ஆறு, பாம்பாறு, தேனாறு, சிற்றாறு போன்றவை இருக்கும் நிலையில், தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்றை கேரள அரசு கட்டிவருவருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அமராவதி அணைக்கு வரும் நீரை கேரள அரசு மறிக்கும் செயலாகத்தான் பார்க்கமுடிகிறது.

sasikala press meet

 

இவ்வாறு ஒரு அண்டை மாநிலம் புதியதாக தடுப்பணை கட்டுவது பற்றி சாமானியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இங்குள்ள திமுக தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு எதுவுமே தெரியவில்லையா? இல்லை தெரிந்திருந்தும் கண்டும் காணாமல் இருக்கிறதா? திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரே கேரள மாநில ஆட்சியாளர்கள் என்பதால் அவர்களை எதிர்க்க துணிவில்லாமல், நடப்பவற்றையெல்லாம் வேடிக்கை பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? தமிழக விவசாயிகள் அழிந்தாலும் பரவாயில்லை தங்கள் கூட்டணிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்று திமுக ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்களா? என்றும் தெரியவில்லை. மேலும், முறையாக அனுமதி பெற்றுத்தான் இந்த புதிய தடுப்பணை கட்டப்படுகிறதா? என்ற கேள்வியை தற்போது கேரள அரசிடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் எழுப்பியுள்ளது. திமுக தலைமையிலான அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?

ஏன் இதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது? இது போன்று தமிழக விவசாயிகளை வஞ்சிக்கின்ற திமுக தலைமையிலான விளம்பர அரசின் அலட்சியப்போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கேரள அரசு முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும். அதேபோன்று சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதையும் தடுத்து நிறுத்தவேண்டும். தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில், திமுக தலைமையிலான விளம்பர அரசு விழிப்புடன் செயல்பட்டு, கேரள அரசு அணைகள் கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு வரும் நீரை மறிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தேவையான உரிய சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ