இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பாக மாறி மக்களின் ஜனநாயகத்தை பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் என வேல்முகன் குற்றம்சாட்டியுள்ளாா்.


தமிழக வாழ்வுரைமை கட்சித் தலைவர் டி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய, மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று பாஜக ஆட்சியின் அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டிருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கே நேர்ந்துள்ள பேராபத்தாகும்.
Special Intensive Revision (SIR) என்றப் பெயரில், வாக்காளர் பட்டியலை “திருத்துகிறோம்” என்றப் போர்வையில், எதிர்க்கட்சிகளும் பிற கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் மட்டும், இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, அவர்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பறிப்பது என்பது, தேர்தல் ஆணையத்தின் நிர்வாக நடவடிக்கை அல்ல. இது திட்டமிடப்பட்டப் பாசிச அரசியல் சதி!
பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த SIR ஏன் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை?
அங்கே மட்டும் வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறதா? அல்லது பாஜக விற்கு வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் மட்டும் பட்டியலில் இருந்தால் போதுமா? இதுதான் ஜனநாயகமா?
வாக்குப் பெட்டியில் தோல்வி கண்ட பாஜக, இப்போது வாக்காளர்களையே அழிக்கும் அரசியலுக்கு இறங்கியுள்ளது. வாக்குகளால் வெல்ல முடியாத பாஜக, வாக்குரிமையையே பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள்: “SIR என்பது திருத்தம் அல்ல. அது ஒரு Super Emergency. தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.” அவர் எழுப்பும் இந்தக் குரல் ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள அவசரகால எச்சரிக்கை!
தமிழ்நாட்டில், உயிருடன் இருக்கும் இளைஞர்கள் “மரணித்தவர்கள்” எனக் குறிக்கப்பட்டுள்ளனர், உழைக்கும் மக்கள் “இடம்பெயர்ந்தவர்கள்” என நீக்கப்பட்டுள்ளனர், முழுக் குடும்பங்களே ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல் போயிருக்கிறது! இது தவறுதலாக நடந்திருக்கிறதா? இல்லை.
இது மக்கள் விரும்பும் அரசியல் சக்திகளைப் பலவீனப்படுத்தும் திட்டமிட்ட நடவடிக்கை. தேர்தல் ஆணையம் சுயாதீனமாக செயல்படாவிட்டால், இந்த நாடு ஜனநாயகக் குடியரசாக இருக்காது. அது தேர்தல் முகமூடி அணிந்த பாசிச ஆட்சியாக மாறிவிடும். அப்படித்தான் மாறிக் கொண்டிருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, இந்தியப் பெருநிலத்தில் வாழும் அனைத்து மக்களும், பாசிச பாஜகவின் சூழ்ச்சிகளைக் கண்டறிந்து, அடையாளம் கண்டு, ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய காலம் இது. தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக பாசிச அரசியலோடு உள் நுழையாதவாறு மக்கள் ஒன்றுபட்டு எழ வேண்டும்.
இது கட்சி அரசியல் அல்ல! இது ஆட்சி மாற்றப் போராட்டமும் அல்ல! இது ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டம்! வாக்குரிமை எங்கள் உயிர்! ஜனநாயகம் எங்கள் அடையாளம்! பாசிச பாஜகவின் எந்தச் சூழ்ச்சிக்கும், இந்த மண்ணில் இடமில்லை!” என்று தமிழக வாழ்வுரைமை கட்சித் தலைவர் டி.வேல்முருகன் குறிப்பிட்டுள்ளாா்.
SIR – மாநில அரசின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்பது இல்லை – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


