தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர் பகுதிகளில் விடிய காலை முதல் தற்போது வரை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் உருவாகி கடந்த தினங்களில் பெய்யாத கன மழை, இன்று அதிகாலை முதல் கொட்டி தீர்த்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குடன் வாகனத்தை இயக்கிவருகின்றனர். இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்துவந்த கனமழையால் பொதுபணி துறைக்கு சொந்தமான 528 ஏரிகளில் 220 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று இரவு மாவட்ட நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் காலை செயல்பட தொடங்கின. மாணவர்களும் மழையில் நனைந்தவாறு பள்ளி சென்றனர். இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.