தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜுவல்லரி கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நவீன், சதீஷ் ,பெருமாள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடையது என விசாரணையில் கூறப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்புடைய 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் யாருடையது எங்கிருந்து வந்தது என்பது குறித்து அடுத்த கட்டமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தினால் தேர்தல் பணப்பட்டுவாடா விற்காக கொண்டு செல்லப்பட்டதா என்ற அடிப்படையில், தமிழக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை இந்த வழக்கில் பாஜக நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், கோவர்தனன், எஸ்.ஆர் சேகர், நீல முரளி யாதவ் ஆகியோரிடம் நேரில் CBCID அதிகாரிகள் விசாரணை செய்துள்ளது
இந்நிலையில் 4 கோடி ரூபாய் பணம் தனியார் ஜுவல்லரி கடை உரிமையாளர் மூலமாக கொடுக்கப்பட்டது என்ற தகவல் விசாரணையில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் சவுகார்பேட்டையில் உள்ள தனியார் ஜுவல்லரி கடை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்து நான்கு கோடி பணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனர்.ஜுவல்லரி கடை உரிமையாளரின் உதவியாளர் மூலமாக ரூபாய் 4 கோடி பணம் கை மாறி இருப்பது தொடர்பாகவும், கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட்டது
மேலும் கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு கொண்டு வந்தது தொடர்பாகவும்,கொண்டு வந்த பணத்திற்கு ஆவணங்கள் உள்ளதா,கணக்கில் காட்டப்பட்டதா என விசாரணை செய்துள்ளனர்.
தனியார் நகைக்கடை உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்டமாக தொடர்புடைய நபர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.