நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டம் நடத்தி எந்த பயனுமில்லை- செல்லூர் ராஜூ
மதுரை அதிமுக மாநாட்டிற்காக பெரியார் பேருந்து நிலையம் அருகே பறக்கவிட்ட மெகா பலூனை பறித்து காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுக மாநாட்டிற்காக மெகா பலூனை பறக்கவிட அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு மிகவும் சீப்பான, மலிவான அரசியல். அதிமுக மாநாடு நடைபெறும் நாளில், திமுக நீட் தேர்வுக்காக போராட்டம் நடத்துவதாக அறிவித்தது தரக்குறைவான செயல். நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி எந்த பயனுமில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும். திமுகவால் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள், திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.
திமுகவுக்கு நீட் தேர்வு ரத்து முக்கியமல்லை, அதை வைத்து பிழைப்பு அரசியல் பாமரனும் புரிந்து கொண்டுள்ளனர். திமுகவினர் நடத்தும் இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகளையும் இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள தயாராக இல்லை. விடிய திமுக அரசை தமிழக மக்கள் தூக்கி எறிவது நிச்சயம்.” என்றார்.